.

Saturday, January 17, 2015

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகளும் அதை தடுக்கும் வழிமுறைகளும்


நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.

அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

கிருமிகளின் பட்டியல்

லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.

அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சுத்தம் உங்கள் கையில்

தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம்.

இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாகத் தொற்றிவிடும்.

நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதுதான், நமக்குக் கைவந்த கலையாயிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப்யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உணவுத் துணுக்கை ஆதாரமாகக் கொண்டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகிவிடும்.

சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்பு, சுத்தத்தைத் துரத்தி விடுகிறது.

சில அலுவலகங்களில் இடம் மாறியோ, வேலை நேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்த நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையில் சுத்தம் செய்வது எவ்வளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத்தெடுக்கலாம்.

இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத்தம். எங்கெல்லாம் கிருமித் தொற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல் லாம் சென்றுவந்த பிறகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண்ணீரிலோ அல்லது சுத்திகரிப்பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக்கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும்.

அதேபோலச் சாப்பாடோ, கொறிப்போ எதையும் தூசி பறக்கும், மனிதர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலோ சாப்பிடுவதைத் தவிருங்கள். இப்படிச் சுத்தத்தைப் பராமரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்.
Disqus Comments