கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் குண்டாகும் என்று மட்டுமே சொல்லி வருகிறார்கள். ஆனால், உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தி இந்த கொழுப்பில் இருந்துதான் கிடைக்கிறது.
எனவே, அதிகப்படியான கொழுப்புச் சத்து மட்டுமே உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
பொதுவாகவே பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியானது, உடலில் கொழுப்புச் சத்தை சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால், மெனோபஸ் காலத்துக்குப் பிறகு இது சுரக்காததால், பெரும்பாலான பெண்கள் மெனோபஸ் காலத்துக்குப் பிறகு உடல் எடை கூட வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, மெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்கள் தங்களது கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
ஹை கொலஸ்ட்ரால் என்பது பரம்பரை ரீதியாகவும் வருகிறது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒருவருக்கு பரம்பரையில் ஹை கொலஸ்ட்ரால் நோய் இருந்தால், அவர் மிக எச்சரிக்கையாக இருக்கும்பட்சத்தில் அந்த நோயில் இருந்து நிச்சயம் தப்பிக்கலாம்.
சரியான உணவு, சத்தான உணவை அளவோடு சாப்பிடுவதால் ஹை கொலஸ்ட்ராலை தவிர்க்கலாம்.
ஹை கொலஸ்ட்ரால் ஏற்பட்ட பிறகும் கூட, தியானம், முறையான சாப்பாடு, மருந்து மூலமாக அதனை நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். மேலும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சியும் அவசியமாகும்.
கொழுப்பைக் குறைக்க பயிற்சிகள் செய்வோர், உணவைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம். மருந்து சாப்பிடுகிறோம், உடற்பயிற்சி செய்கிறோமோ என்று, கண்டதையும் சாப்பிடக் கூடாது.
அதிக கொழுப்பு உள்ளவர்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.
அதிக கொழுப்பைப் போலவே, குறைவான கொழுப்புச் சத்து உள்ளவர்களும் பல்வேறு பிரச்னைக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு எளிதாக தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
ஹை கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிட்டு, அதன் மூலம், கொலஸ்ட்ரால் குறைந்துவிட்டால் உடனடியாக மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடக் கூடாது. அவ்வாறு நிறுத்தி விட்டால் மீண்டும் பழைய நிலைமைக்கே சென்று விடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒருவர் ஒல்லியாக இருந்தால், அவருக்கு ஹை கொலஸ்ட்ரால் இருக்காது என்று நினைக்க வேண்டாம். ஒல்லியோ, உடல் பருமனோ, யாருக்கும் ஹை கொலஸ்ட்ரால் ஏற்படலாம்.
நன்றி வாணிஸ்ரீ சிவகுமார்