‘மாஸ்டர் 3 டீ, அதுல ரெண்டு சக்கரை இல்லாம....’இன்று டீக்கடைகளில் அடிக்கடி இப்படி கேட்கலாம். ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் வியாதி’ என்று சொல்லப்பட்ட சர்க்கரை நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த சர்க்கரை நோய், இன்று 20 வயதில் உள்ளவர்களையும் எளிதில் பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதற்குக் காரணம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான்.
நமது உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக ‘உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்‘ என ஐக்கிய நாடுகள் சபையால் 2006 முதல் கடைபிடிக்கப்படுகிறது.
அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன். இதில் டைப்1, டைப்2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, ‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’ என்று சொல்லக்கூடிய ‘ப்ரீ டயாபீட்டிஸ்’ வகையும் உள்ளது. உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்1 சர்க்கரை நோய் என்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும்.
ஆனால், அது குறைந்த அளவாகவோ அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே ‘கர்ப்பக் கால சர்க்கரை நோய்’ என்கிறோம். சர்க்கரை நோயாளிகளைவிட, ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்கு சர்க்கரை நோய் எந்நேரமும் வரலாம்.
இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும். இவர்கள் எச்சரிக்கையாக இருந்தால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இந்த நான்கு நிலையிலும் இருப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்படலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்துகள், இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை.
இன்று உலகில் 38.2 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2035ம் ஆண்டில் 59.3 கோடியாக உயர வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 10ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். 1970களில் நகர்ப்புறங்களில் 9 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 2 சதவீதம் பேரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது தற்போது நகர்ப்புறங்களில் 20 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 10 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்கு இதய நோய்கள், கிட்னி பாதிப்புகள் உள்ளிட்ட நோய்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகளுடன் உணவுக்கட்டுப்பாடு, சீரான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவோம். வாழ்க்கையை இனிப்பாக்கி கொள்வோம்.
நன்றி தினகரன்