வறட்டு இருமலை விரட்டி அடிக்கும் மஞ்சள்தூள்!
குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லனா... தாய்மார் துடிதுடிச்சுப்போயிருவாங்க. அப்படிப்பட்டவங்கள்லாம், இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தைக் கேட்டு நடந்தா... பதறித் துடிக்கறதுக்கு அவசியமே இருக்காது... சந்தோஷத் துள்ளல் மட்டும்தான் இருக்கும்.
சளிக் கோளாறுகள் குணமாக...
ஆடாதொடை இலைச்சாறு மூணு சொட்டு எடுத்து, கொஞ்சம் தேன் கலந்து கொடுத்துட்டு வந்தீங்கனா... குழந்தைங்களுக்கு வர்ற சளிப் பிரச்னை இருந்த இடம் தெரியாமப் போயிரும்.
நெஞ்சுச் சளி விலக...
தூதுவளை (3 எண்ணிக்கை) இலையை, நெய் இல்லைனா... வெண்ணெய்ல வதக்கி சாறு எடுத்து குழந்தைகளுக்கு உள்ளுக்கு கொடுத்து வந்தீங்கனா, நெஞ்சுச் சளி பட்டுனு விலகும்.
கல்யாணமுருங்கை இலையை சாறு எடுங்க. அதுல ஐந்தாறு துளியை எடுத்து, தேன் கலந்து உள்ளுக்கு கொடுத்து வந்தாலும் நெஞ்சுச் சளி குணமாகும்.
மூக்கடைப்பு, தலைபாரம், சளிக் கோளாறு வந்தா... குழந்தைங்க படுறபாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட நேரத்துல தலையணைக்குள்ள நொச்சி இலையை பரப்பி வச்சு தூங்க வச்சா போதும்... குழந்தைங்க நிம்மதியா தூங்குவாங்க. தலைபாரம் இறங்கறதோட... சளிப் பிரச்னையும் விலகி ஓடிடும்.
வறட்டு இருமல் குணமாக...
ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை பால்ல கலந்து குடிக்கறதுக்கு கொடுத்து வந்தா... வறட்டு இருமல் குணமாகும். இந்த வைத்தியத்தை குழந்தைகளுக்கும் செய்யலாம்.
ஒரு சிட்டிகை வல்லாரை சூரணத்தைத் தேன்ல கலந்து கொடுத்து வந்தா... சளி, இருமல் குணமாகும்.
தூதுவளை கொடியை சிறுசு சிறுசா நறுக்கி, காய வச்சு பொடி செய்துக்கணும். அதுல ஒரு பட்டாணி அளவு எடுத்து, தேன் கலந்து உள்ளுக்கு கொடுத்து வந்தா... இருமல் மட்டுமில்ல, சளிக்கோளாறு எல்லாமே சரியாகிரும்.
கருஞ்செம்பைப்பூ 100 எண்ணிக்கை எடுத்து, தேங்காய் எண்ணெய்ல போட்டு காய்ச்சி தலைக்கு தேய்ச்சி வந்தா... சளி, இருமல், தலைவலி, ஒற்றை தலைவலி எல்லாமே குணமாயிரும்.
ரத்தபேதி, சீதபேதி குணமாக...
மாசிக்காயை பொன்வறுவலா வறுத்து இடிச்சி தூளாக்கி வச்சிக்கிரணும். அதுல ஒரு சிட்டிகை எடுத்து, தேன்ல கலந்து உள்ளுக்கு கொடுத்து வந்தா... ரத்தபேதி, சீதபேதி எல்லாம் பட்டுனு நிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் இதையெல்லாம் சமஅளவு எடுத்து பொன் வறுவலா வறுத்து, சூரணம் பண்ணி, அதோட சரிசமமா நாட்டுச் சர்க்கரை சேர்த்து வச்சிக்கிரணும். அதுல ஒரு ஸ்பூன் அளவு எடுத்து காலையில, சாயங்காலம்னு கொடுத்துக்கிட்டிருந்தா... வயித்துப்போக்கு பிரச்னை தீர்ந்துடும்.