.

Thursday, December 4, 2014

சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் அவசியம் படிக்கவும்டயாபடீஸ் என்பது ஒரு டைம் பாம். அது இன்றோ, நாளையோ, அடுத்த ஆண்டோ, இன்னும் பத்தாண்டுகளிலோ, என்னையும் உங்களையும் - ஏன் இந்தக் குழந்தைகள் உள்பட - பல லட்சக்கணக்கானோரைத் தாக்கக்கூடும். - மேரி டைலர் மூர் (அமெரிக்க நடிகை)

இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ, நண்பருக்கோ ‘சர்க்கரை நோய்’ என்று பரவலாக அறியப்படும் நீரிழிவுக் குறைபாடு இருக்கக்கூடும். இந்தப் பிரச்னை அறியப்பட்ட அந்த நிமிடத்தில், நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்திருப்போம். வாழ்வே முடிவுக்கு வந்தது போன்ற ஓர் உணர்வு நமக்குள் வியாபித்திருக்கும். எல்லாவற்றையும் இழந்துவிட்டது போலவும் தனித்துவிடப்பட்டது போலவும் குழப்பமான மனநிலைக்குள் தள்ளப்பட்டிருப்போம். காலப்போக்கில், வேறு வழியின்றி, நீரிழிவு வாழ்க்கைக்குப் பழக்கப்பட வேண்டும்தானே?

நீரிழிவு எனும் மாயச்சுரங்கத்தில் சிக்கி, மீள வழி தெரியாமல் தவிப்பதாக, இனியும் எண்ண வேண்டாம். நீரிழிவையும் அது சார்ந்த ஏராளமான பிரச்னைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு, நலமுடனும் வளமுடனும் மகிழ்வுடனும் வாழ்வோர் ஒருவர் இருவரல்ல... பல லட்சம் பேர் உண்டு. ‘இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என முரசு கொட்டும்  அளவுக்கு, உலகில் - குறிப்பாக இந்தியாவில் நீரிழிவாளர்களின் எண்ணிக்கை மிகமிகப் பிரமாண்டமானது. இதுவரை என்ன செய்தோம் என்பதை விடுங்கள்... இனி நாம் என்ன செய்ய வேண்டும் என நமக்கு வழிகாட்ட, ஏராளமானோர் எக்கச்சக்க அனுபவங்களோடு காத்திருக்கிறார்கள்.

டயாபடீஸ் என்பது நிச்சயமாக ஒரு நோயல்ல... அது ஒரு குறைபாடுதான் (டிஸ் ஆர்டர்). இதுதான் முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். எனக்கும் உங்களில் பலரைப் போலவே, தற்செயலாகத்தான் நீரிழிவு அறியப்பட்டது. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே ஜி.டீ.டீ. என்ற குளுக்கோஸ் தாங்கு திறன் சோதனை எடுத்துக்கொண்டேன். இதுதான் ‘நான் இனிப்பானவன்’ என்பதை உறுதியாக உலகுக்கு அறிவிக்கும் சோதனை. இதன் ரிசல்ட் ‘பாசிட்டிவ்’ என வந்தாலும் கூட, நாம் ‘நெகடிவ்’ ஆகக்கூடாது. டயாபடீஸுடன் வாழ்வது நிச்சயம் சோகம் அல்ல... ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி’ என்று நினைக்கக் கூடாது... அவ்வளவுதான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்... அவருக்கு டைப்  1 டயாபடீஸ் (பிறப்பிலேயே வருவது). இறுதி வரை இன்சுலின் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படியொரு சூழலிலும் அவர் பிரமாதமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் (கிரிக்இன்ஃபோ.காம் பாருங்கள்). அக்ரம் போலவே, நீரிழிவைப் பற்றி வருந்தாமல், ஆனால் - அதற்குரிய கட்டுப்பாடுகளை மதித்து சாதித்தவர்கள் பல பேர். நம்மாலும் அது உறுதியாக முடியும். அடிப்படையான சிறு குறிப்புகளிலிருந்து நம் புதுவாழ்வைத் தொடங்கலாமா?

விருந்தும் விரதமும் நமக்கு (அதாவது நீரிழிவுகாரர்களுக்கு) ஆகாது. ஆகவே, செவ்வாய், வெள்ளி தோறும் சாமிக்கு விரதம், துணையுடன் சண்டை போட்டு பட்டினிப்போர், அரசியல் உண்ணாவிரதங்கள் (பிரியாணி விரதம் உள்பட!) - இதற்கெல்லாம் உடனடி தடா. ‘எப்போதாவது ஒருமுறைதானே’ என கல்யாண வீட்டிலோ, பார்ட்டிகளிலோ, ஸ்பெஷல் விருந்துகளிலோ புகுந்து விளையாடி விடாதீர்கள். ரத்த சர்க்கரை அளவு தறிகெட்டுப்போய் பிரச்னைகள் தொடங்கும். பி.கு.: வடையும் அடையும் உங்களுக்குப் பிடிக்கக்கூடும். ஆனால், ஸ்வீட்டுக்குப் பதிலாக எக்ஸ்ட்ரா வடை சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. ஜாக்கிரதை...

சர்க்கரை குறைப்பாட்டுக்கு கொலாஸ்ட்ராலும் உயர் ரத்த அழுத்தமும் நெருங்கிய உறவினர்கள்!

சரி... ரொம்பப் பயமுறுத்த வில்லை... நீங்கள் தாராளமாக நிறையச் சாப்பிடலாம். ஆனால், இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். தினமும் 5 முறை கூட சாப்பிடலாம்... கொஞ்சம் கொஞ்சமாக! காலை உணவு... மெட்டபாலிசம் என்கிற வளர்சிதை மாற்றத்துக்கு அவசியமான இந்த விஷயத்தை பல பேர் கண்டுகொள்வதே இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 12 ஆண்டுகளாக ‘டிஃபன்’ சாப்பிட்டதே இல்லை என்று பெருமையாகச் சொல்கிறார். டயாபடீஸ்காரர்கள் அப்படியெல்லாம் இருக்கவே கூடாது. இது ரொம்ப முக்கியம்.

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சுண்டல் / வெள்ளரிக்காய் / சாலட் / ஓட்ஸ் - இப்படி ஏதேனும் எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். மதிய உணவோடு வாரம் இருமுறை கீரை மஸ்ட் கண்ணா மஸ்ட்! டால்டா, நெய், கெட்டித் தயிர், வெண்ணெய், பனீர், சீஸ் ஆகியவற்றை கிருஷ்ண பாலனுக்கே அர்ப்பணித்துவிட்டு, கொழுப்பு நீக்கிய நீர்மோரே சிலாக்கியம். கொழுப்பே இல்லாத தயிர் கிட்டினாலும் ஓ.கே.

மாலை 5 அல்லது 6 மணிவாக்கில் சர்க்கரை, வெண்ணெய் இல்லாத கோதுமை பிரெட் / சாண்ட்விச் அல்லது 2 இட்லி (குஷ்பு இட்லி அல்ல!) அல்லது ஒரு சப்பாத்தி (மைதா ஆகாது... கோதுமையே சிறப்பு) சாப்பிடலாம். நேரடி இனிப்புகளும் பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள பழங்களையும் தவிர்த்து விடுங்கள். லெமன் சால்ட் / சர்க்கரை இல்லாத தக்காளி ஜூஸ் சாப்பிடலாம். வேறு ஜூஸ் வேண்டாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது சில பழங்கள் சாப்பிடலாம்.

உணவு பற்றி நிறையவே சொல்லிவிட்டேன். புகையும் மதுவும் பற்றி உங்களுக்கே தெரியும்.  மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாகவே மாத்திரை மாற்றி மாற்றி சுய மருத்துவம் செய்வது கூடவே கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலை, எடை, உணவுப் பழக்கம், வயது என பல காரணிகளுக்குத் தகுந்தாற்போலத்தான் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் கூட, அதையும் குறித்து வையுங்கள்.

3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனையின் போது HBA1C சோதனை எடுத்துக்கொள்ளுங்கள். இது நாம் அந்தக் காலகட்டத்தில் எந்த லட்சணத்தில் உடலை பராமரித்தோம் என்பதை புட்டுப்புட்டு வைத்துவிடும். இது சாதாரண ரத்தப் பரிசோதனைதான். காலையில் உணவோ, காபியோ உட்கொள்ளும் முன் ஃபாஸ்டிங்கில் எடுக்கவேண்டும். ஏறத்தாழ ரூ.300 கட்டணம்.

வாக்கிங்... இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். வாரத்தில் 5 நாட்களாவது கட்டாயம் வாக்கிங் போகவேண்டும். தலா 45 நிமிடங்கள். மொத்தமாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் காலை, மாலை என்று பிரித்துப் பிரித்தும் செல்லலாம். இதுதவிர சிறு உடற்பயிற்சிகள், யோகா நல்லது.
Disqus Comments