முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.
மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.
கொதிப்புக்குக் காரணமாக ரத்தக் கொழுப்பைக் குறைக்க/கரைக்க, புளியை உபயோகத்துக்கு ஏற்ப எடை குறைக்கும் தன்மையுடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம்.
வெந்தயத் தூள், கறிவேப்பிலை பொடியை சுடுசோற்றில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.
பச்சைத் தேநீர் (கிரீன் டீ) ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்பதால், ரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவுமாம்.
மஞ்சள் தூள், லவங்கப்பட்டை மணம்ஊட்டிகள் இதயம் காக்கும் என வெள்ளைக்கார விஞ்ஞானிகள் இப்போது ஆமோதிக்கிறார்கள்!
வேகவைக்காத சின்ன வெங்காயம், வெந்த வெள்ளைப் பூண்டு இல்லாமல் உங்கள் அன்றாட உணவு இருக்க வேண்டாம்!
ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை!
45 நிமிடங்களில் 3 கி.மீ நடைப்பயிற்சி.
30 நிமிட உடற்பயிற்சி/சைக்கிள் ஓட்டல்.
25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.
15 நிமிடங்கள் பிராணாயாமம். அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.
20 நிமிடங்கள் தியானம்.
6-7 மணி நேரத் தூக்கம்.
மேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம். சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது!