நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவ்வுடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். எனவே, சிறுநீரகத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். முதுகெலும்புக்குக் கீழ்ப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதைகளைப் போல் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம். நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும், நாம் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாலே போதுமானதாகும்.
நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் ஒரு முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது. உடலில் உள்ள நீரின் அளவையும் அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் அமிலங்களின் அளவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி
நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி இன்றியமையாததாகும். உடலின் பல பாகங்களின் நலத்திற்கே அது நல்லது எனும் போது, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இந்த உடற்பயிற்சி தான் முக்கியம். அதைத் தவறாமல் செய்து வருவது சிறுநீரகத்திற்கும், அதன் செயல்பாடுகளுக்கும் நல்லது.
மருத்துவ சோதனைகள்
நாம் நம் உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நம் சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரம்பரை பரம்பரையாக சிறுநீரக வியாதிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.
உணவுக் கட்டுப்பாடு
உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது உங்கள் உணவுக் கட்டுப்பாடு, சிறுநீரகத்தை நன்றாகச் செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது.
இரத்த அழுத்தம்
சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இரத்த அழுத்தம் முக்கியம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
இரத்தத்தில் சர்க்கரை
அதேப்போல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களை சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.
நிறைய நீர்
சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு நிறைய நீராகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது சிறுநீரகத்தைத் தான் நேரடியாகப் பாதிக்கும்.
'நோ' சிகரெட்
அதேபோல், புகைப்பிடிப்பவர்களையும் சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்தால், சிறுநீரகம் மட்டுமல்லாமல் மற்ற பல உடல் பாகங்களும் தப்பித்துக் கொள்ளும்.
சரியான மருந்துகள்
நம் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு வந்தாலும், அதற்குத் தகுந்த சரியான மாத்திரை-மருந்துகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.