.

Thursday, September 11, 2014

முகப்பருக்கள் வருவதற்கான காரணங்கள்!!!

முகப்பரு

தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். சரி பருக்கள் வந்தால் அனைவரும் என்ன செய்வோம்? அதனை சரிசெய்ய என்ன வழி என்று யோசித்து, அதனை சரிசெய்ய முயற்சிப்போம்.
ஆனால் யாராவது அது எதற்காக வருகின்றது என்று யோசித்ததுண்டா? அப்படி யோசித்தால், நிச்சயம் பருக்கள் வருவதையே தடுக்கலாம்.
பருக்கள் எந்த காரணங்களுக்காக எல்லாம் வரும் என்று படித்து தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்துவிட்டால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

எண்ணெய் பசை சருமம்

பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும். எனவே இத்தகையவர்கள், தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். மேலும் தினமும் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

சிலருக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் முகப்பருக்கள் வரக்கூடும். எனவே அத்தகையவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடித்து, பழங்களை எடுத்து வர வேண்டும்.

பேஷ் வாஷ் அல்லது ஃபேஷ் க்ரீம்

சிலர் ஃபேஷ் வாஷ் அல்லது ஃபேஷ் க்ரீம்மை மாற்றியிருப்பார்கள். அப்படி மாற்றிய க்ரீம்மானது, சருமத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கும். அவ்வாறு சருமத்திற்கு பொருத்தமற்றதை பயன்படுத்தினால், அவை பருக்களை உண்டாக்கும்.

கவலை மற்றும் மன அழுத்தம்

கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இப்படி ஏற்பட்டால், அவை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும்.

செரிமான பிரச்சனை 

செரிமான மண்டலம் சீராக இயங்காமல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைக்கு உள்ளானவர்களுக்கும் முகப்பருக்கள் வரக்கூடும். ஆகவே ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, தினமும் சிறு உடற்பயிற்சியுடன், தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பொடுகு

தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அந்த பொடுகு முகத்தில் பட்டு பருக்களை ஏற்படுத்தும். எனவே பருக்கள் வருவதை தவிர்க்க வேண்டுமானால், முதலில் தலையை சுத்தமாக பொடுகின்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் குறைவாக குடிப்பது

சிலர் தண்ணீரை மிகவும் குறைவாக குடிப்பார்கள். அத்தகையவர்களுக்கும் முகப்பருக்கள் அதிகம் வரக்கூடும். எனவே தண்ணீரை அதிகம் குடித்து பருக்கள் வருவதைத் தவிர்த்திடுங்கள்.
Disqus Comments