.

Monday, September 8, 2014

விட்டு விட்டு இருமலா...நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கும்

விட்டு விட்டு இருமலா

பெண்கள் சமைக்கும்போது சமையல் நெடி காரணமாக இருமுவார்கள். அது இருமலல்ல. சிலர் காலையில், மதியத்தில், மாலையில் என ஒரு சில தடவை இருமுவார்கள். அது பழக்கத்தின் காரணமாக வருவது. அது இருமலல்ல. நாள் முழுவதும் விட்டு விட்டு இருமுவார்கள். அது இருமலாகும். சில நாட்கள் இருமியவர்களுக்கு அது பழக்கமாகி வழக்கமாகி விடும். சில மாதங்களாக இருமிக்கொண்டு இருப்பார்கள். அதை தொந்தரவாக கருதாமல் இயல்பாக எடுத்து கொள்வார்கள். அது ஆபத்தானது.

2 வாரத்திற்கு மேல் தொடரும் இருமல் பல்வேறு நுரையீரல் நோய்களுக்கு அறிகுறியாக இருக்கக்கூடும். அதை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தி கொண்டு, அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

2 வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் சிலருக்கு தும்மல், கண்ணில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல் ஏற்படும், அது ஒவ்வாமையின் (அலர்ஜி) அறிகுறி. சிலருக்கு மூக்கடைப்பு, தலைக்கனம் இருக்கும், அது சைனஸ் நோய்க்கான அறிகுறி. சிலருக்கு மூச்சு விட முடியாமல் இளைப்பு ஏற்படும், அது ஆஸ்த்மா நோய்க்கான அறிகுறி.

இது 3 வாரத்திற்கு மேல் இருமல், இருந்தால் சிலருக்கு நெஞ்சுகரிப்பு, தொண்டை வலி, உமிழ்நீர் அதிகளவில் சுரத்தல், வாந்தி வரும். இதுவும் நுரையீரல் தொடர்பான நோய். சிலருக்கு சோர்வு, உடல் இளைப்பு, வியர்வை கொட்டுதல், மாலையில் காய்ச்சல் வருவது போல் இருந்தால் அது காசநோயின் அறிகுறி. தொடர் இருமல், சளியுடன் ரத்த துளிகள் வந்தால் அது புற்றுநோயின் அறிகுறி.

இதில் அலர்ஜி, சைனஸ், ஆஸ்த்மா ஆகியவை பெரும்பாலானோருக்கு குளிர்காலத்தில் மட்டும் வரும். மருந்து, மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம். நெஞ்சுகரிப்பு, உமிழ்நீர் அதிகளவில் சுரத்தல், வாந்தி ஆகியவற்றிற்கு மருந்து, உணவு மற்றும் பழக்க வழக்கம் மாறுதல் மூலம் குணப்படுத்தலாம். காசநோய்க்கு 9 மாதம் தொடர் சிகிச்சை பெற்று குணப்படுத்தலாம்.

இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருமலோடு பழக்கமாகி, வழக்கமாக்கி கொண்டால் பாதிப்புகள் அதிகம். சிகிச்சை அதிகம் தேவைப்படும். குணமாக்குவதில் சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க 2 வாரத்திற்கு மேல் தொடர் இருமல் இருந்தால் உடனடியாக நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவில் பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். இதில் உள்ள நோய்களின் அறிகுறிகளுக்கேற்ப எக்ஸ்ரே, சளி டெஸ்ட், எண்டோஸ்கோபி டெஸ்ட் உள்ளிட்ட தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
Disqus Comments