.

Tuesday, September 9, 2014

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கான கை வைத்தியங்கள்!!!



ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய். இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் வெள்ளையணு புற்றுநோய், அல்லது இதர நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

எளிமையாகச் சொல்வதானால், ஈறுகளில் வழக்கமாக ஏற்படக்கூடிய இரத்தக்கசிவே ஈறு இரத்தக்கசிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் கொடிய நோய்களான இரத்தத்தட்டு நோய் அல்லது லுக்கேமியா போன்றவற்றின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதனை ஒழுங்கான முறையில் கவனிக்காவிட்டால், ஜிஞ்சிவிட்டீஸ் என்றழைக்கப்படும் ஈறு வீக்க நோய் வர வழிவகுக்கும். இவ்வாறு ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை எளிதான கை மருத்துவ முறைகள் மூலம் தவிர்க்கலாம். இதனால் அது பின்பற்றுவதற்கு எளிதானவையாக இருப்பதோடு, பல் ஆரோக்கியத்தை சில வாரங்களிலேயே மேம்படுத்தும்.
ஈறுகளின் இரத்தக்கசிவை பின்வரும் அறிகுறிகள் மூலம் கண்டு கொள்ளலாம்.

பல் துலக்கும் போதோ அல்லது உமிழும் போதோ எச்சிலில் இரத்தம் தென்படுவது.

நார்ச்சத்து மிக்க அல்லது சற்று கரடுமுரடான உணவுகளை உட்கொள்ளும் போது இரத்தம் கசிவது.

வாய் துர்நாற்றம்

இத்தகைய ஈறுகளின் இரத்தக்கசிவை தவிர்க்க மற்றும் நிவர்த்தி செய்ய ஏராளமான கை வைத்தியங்கள் உள்ளன. இவற்றை ஒழுங்கான முறையில் மேற்கொள்வதன் மூலம், இவற்றின் பயன்கள் முழுவதும் கிடைக்கும்.


சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி குறைபாடு, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றாகும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தை வழங்கி, ஈறுகளின் இரத்தக்கசிவை தடுப்பதற்கு உதவக் கூடியவையாகும்.

பால்

பால், கால்சியம் சத்தின் தலைசிறந்த மூலாதாரமாகும். ஆகவே ஈறுகளை வலுப்படுத்த வேண்டுமெனில், உடலில் கால்சியம் சத்தை மீண்டும் மீண்டும் நிரப்ப வேண்டியது முக்கியம். எனவே ஈறுகளில் இரத்தக்கசிவை தவிர்க்க தினமும் தவறாமல் பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகளை நன்கு மென்று திண்பதன் மூலம் பற்கள் தூய்மையடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்படும். ஆகையால், தினமும் ஒரு பச்சைக் காய்கறியை மென்று தின்னும் பழக்கத்தை மேற்கொள்வது நலம்.

க்ரான்பெர்ரி மற்றும் அருகம்புல் ஜூஸ்

க்ரான்பெர்ரி அல்லது அருகம்புல் சாற்றினை அருந்துவதன் மூலம் ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் பெறலாம். க்ரான்பெர்ரி சாறு அதன் ஆன்டிபாக்டீரியல் தன்மைகளை முடுக்கி விட்டு, ஈறுகளின் மேல் படிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்களை துடைத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா வாயில் இருக்கக் கூடிய மைக்ரோஎன்விரான்மெண்டை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றி பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அதற்கு பேக்கிங் சோடாவை விரல்களில் தொட்டு, ஈறுகளில் தேய்த்துக் கொள்ளலாம்.

கிராம்பு

கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லலாம் அல்லது கிராம்பு எண்ணையை ஈறுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம். இது, பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பழமையான மற்றும் எளிமையானதொரு கை வைத்தியமாகும்

புதினா எண்ணெய்

பல் துலக்கும் போது, வாயை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும் வைத்திருக்கக்கூடிய புதினா எண்ணெயை உபயோகிக்கலாம்.

சீமை சாமந்தி டீ

சீமை சாமந்தி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேயிலை ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதாகும்.

உப்புக் கரைசல்

பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்து வரலாம். இது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்கான மிகச் சிறந்த கை வைத்தியமாகும்.

மசாஜ்

பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கும். இது ஈறுகளை வலுவாக்கி இரத்திக்கசிவிலிருந்து அவற்றை பாதுகாக்கும்.

கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தல்

கொழுப்புச்சத்து மிகுந்த, காரசாரமிக்க, கனமான உணவுப் பதார்த்தங்கள் பல் இடுக்குகளில் படிந்து, நுண்ணுயிர்களுக்கு உணவு வழங்கி ஈறுகளில் இரத்தத்தை கசியச் செய்து, ஜிஞ்சிவிட்டிஸ் (gingivitis) வரை கொண்டு செல்லும். எனவே இது போன்ற கொழுப்புச்சத்து மிக்க உணவுப் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்த்தல் நலம்.

புகைப்பிடிப்பதை தவிர்த்தல்

புகைப்பழக்கமானது வாயின் உட்புறங்களில் குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் உயிர்வளியற்றதாக மாற்றும். எனவே வாயை பாக்டீரியாக்கள் இன்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனில், புகைப்பிடிப்பதைத் தவிருங்கள்.
Disqus Comments