.

Friday, September 5, 2014

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்?

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்

“நாலு காபி’’ என ஆர்டர் சொன்னதுமே, எதிரில் இருப்பவர்களிடம் ‘‘ஷுகர் நார்மல்தானே?’’ எனக் கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு?‘‘உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்?’’ என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே... என்ன செய்துடும்?’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்.

‘‘எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவை. ஆனால், அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால மனிதர்கள் உணவில் நிறைய உப்பு எடுத்துக்கொண்டார்கள். ஆனால், உடல்  உழைப்பால் வியர்வை வழியாக அதை வெளியேற்றினார்கள். இன்றைய ஏசி லைஃப் ஸ்டைலில் அந்த உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஆனால், நவீன உணவுகள் உப்புக் கரிக்காத  வகையில் நூதனமான உப்பு வகைகளை நம் உடலுக்குள் திணிக்கின்றன’’ என ஷாக் துவக்கம் கொடுத்தார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியனான தாரிணி கிருஷ்ணன்.

‘‘நம் உடலின் ஒவ்வொரு ரத்த செல்களுக்கு உள்ளேயும் பொட்டாஷியம் எனும் உப்பு உள்ளது. செல்களுக்கு வெளியே சோடியம் எனும் உப்பு உண்டு. இந்த இரண்டுமே சமமான அளவுகளில்  இருந்தால்தான் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகம் உப்பு சேர்ப்பதால் இந்த சமன்பாடு கெட்டு, ரத்தம் சரியாகப் பாயாமல் போகும். இதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். ரத்த அழுத்தம் வ ந்துவிட்டால், அது இதய நோய்களையும், சிறுநீரகப் பிரச்னைகளையும், ஸ்ட்ரோக்கையும் காலப் போக்கில் அழைத்து வந்துவிடும். ஆக, உப்பு விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டியது மிக மு க்கியம்.

உப்பென்றால் ஏதோ தயிர் சாதத்தில் நாமாக போட்டுக் கொள்வது மட்டுமே என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் எல்லா வித உப்புகளையும் குறைத்துப் பயன்படுத்த வேண்டும். இன்றைய பாக்கெட் உணவுகள் நீண்ட நாள் கெட்டுவிடாமல் இருப்பதற்கான பிரிசர்வேட்டிவாக சோடியம் பென்சொயேட் சேர்க்கப்படுகிறது. ருசியைக் கூட்டுவதற்காக மோனோசோடியம் க்ளூடமேட் போன்ற உப்புப்  பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பேக்கிங் சோடா, ஆப்ப சோடா போன்றவை மிருதுத் தன்மைக்காக சேர்க்கப்படுகின்றன. இவை எல்லாமே உப்புதான். ஒரு உணவுப் பொருளில் இருக்க வேண்டிய  உப்பின் அளவை இவை கண்ணுக்குத் தெரியாமல் கூட்டி விடுகின்றன.

சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் ஒரு டீ ஸ்பூன், அதாவது 5 கிராம் உப்பைத்தான் உண்ண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால் பாக்கெட்  உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உள்ள உப்பின் அளவு, இதைவிட பத்து மடங்கு அதிகம். சாதாரணமாக நாம் வீட்டில் செய்யும் 200 மில்லி கிராம் சூப்பில் 2 மில்லி கிராம்  உப்புதான் இருக்கும். ஆனால், பாக்கட்டுகளில் விற்கப்படும் 200 மில்லி கிராம் சூப்புகளில் 20 மில்லி கிராம் உப்பு இருக்கும். காரணம், இவற்றில் இருக்கும் பல வகையான உப்புச் சேர்க்கைகள்தான்.

பிளட் பிரஷர் இருக்கும் நோயாளிகள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது இந்தியாவில் குறைவாக இருக்கிறது என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அப்படியே டாக்டர்களிடம் போனாலும் ‘ஊறுகாயை  சாப்பிடாதே’, ‘வீட்டில் சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்க்காதே’ என்றுதான் அட்வைஸ் செய்வார்கள். ‘பாக்கெட் உணவை சாப்பிடாதே’, ‘ரெடிமேட் உணவைத் தொடாதே’ என்று  யாரும் சொல்வதில்லை. உப்பு பற்றிய விழிப்புணர்வு இங்கு குறைவாகவே இருக்கிறது’’ என்றவர், உப்பின் தரம் இன்று கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.

‘‘அன்று நாம் பயன்படுத்திய கல் உப்பு உண்மையிலேயே சிறந்தது. அதில் நிறம் குறைவாக இருந்தாலும் எல்லா வித சத்துக்களும் நிறைந்திருந்தன. இன்று வெள்ளையாக எதுவும் இருக்கவேண் டும் என்பதற்காக பெரிய நிறுவனங்கள் விற்கும் தூள் உப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் கல் உப்பை வெள்ளையாக்குகிறேன் பேர்வழி என்று உப்பில் உள்ள பல சத்துக்களை  வெளியேற்றி விடுகிறார்கள். சத்தும் இல்லை அளவும் இல்லை என்றாகிவிட்டது நம் உப்பு டயட்!’’ என்றார் அவர் வேதனையோடு... உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு, உப்புக்காக கவலைப்படுவோம்!

உப்பு எவ்வளவு!

ஒரு நாளில் ஒருவர் சாப்பிட வேண்டிய உப்பின் அளவு ஐந்து கிராம் என்றால், ஒரு சராசரி இந்தியர் 12 முதல் 18 கிராம் உப்பு சாப்பிடுகிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இந்த மாற்றத்துக்கான காரணகர்த்தா, ‘ஃபாஸ்ட்ஃபுட் உணவு’! பாக்கெட் உணவுகள் மூலம் உடலில் மறைமுக உப்பு சேர்வதே விபரீதங்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. உலக மக்கள் இப்போது சாப்பிடும் உப்பில்  30 சதவீதத்தை 2025ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பாக்கெட் உணவுகளின் மேற்புறத்தில், அதில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை. இங்கே கலோரி, புரோட்டீன், சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை மட்டும் குறிப்பிட்டால் போதும். ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் என்ற தொண்டு நிறுவனம், இந்தியாவில் விற்கப்படும் 7124 உணவுகளை  ஆய்வு செய்தது. இவற்றில் 73 சதவீத உணவு பாக்கெட்டுகளில் ‘உப்பு அளவு’ குறிப்பிடப்படவில்லை. ‘‘இதையும் கட்டாயமாக்க வேண்டும். விலை மற்றும் காலாவதி தேதி பார்ப்பது போல உப்பு  அளவு பார்த்து பொருளை வாங்க வேண்டும்’’ என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்!

உடலில் உப்பைக்கூட்டும் 10 உணவுகள்!

* சமையல் சோடா
* சாஸ்
* ரெடிமேட் இறைச்சி மற்றும் மீன்
* பாலாடைக்கட்டி
* ஊறுகாய்
* இன்ஸ்டன்ட் சூப்
* உப்பிட்டு வறுத்த பயிறுகள்
* ஸ்நாக்ஸ் அயிட்டங்கள்
* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்
* பாக்கெட்டில் அடைத்த காய்கறிகள்
Disqus Comments