.

Tuesday, August 26, 2014

சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.

மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

அதுமட்டுமல்லாமல் மஞ்சளை நீரில் கலந்து நாளுக்கு ஒரு முறை அதனை குடித்து வந்தால், இரத்தமானது சுத்தமாகும். குறிப்பாக மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று மஞ்சளானது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

முகப்பரு

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும்.

கருமையைப் போக்கும்

மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

சுருக்கங்கள் சருமம்

சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு இருந்தால், அதனை போக்க, தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய்/விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிக்க செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மஞ்சளானது வெடிப்புக்களை போக்கும்.

கரும்புள்ளிகள் 

கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

அழகான உதடுகள் 

உதடுகள் கருமையடைந்து இருந்தால், மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து, உதட்டில் மட்டுமின்றி முகத்திலும் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், உதடுகள் அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

முடி வளர்ச்சியை தடுக்கும் 

பெண்களின் மூக்குக்கு கீழே, கை, கால்களில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்க, மஞ்சள் தூளுடன், வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முடியின் வளர்ச்சியானது தடுக்கப்படும்.

பொலிவான சருமம்

சருமம் பொலிவோடு இருக்க, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்

பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படாமல் இருக்க, கர்ப்ப காலத்தில் தினமும் தயிர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, வயிற்றில் தடவி வந்தால், பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெள்ளையான சருமம்

சருமம் வெள்ளையாக வேண்டுமானால், மஞ்சள் தூளுடன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
Disqus Comments