.

Sunday, August 10, 2014

ஆண்களுக்கான ஷேவிங் டிப்ஸ்!


ஆண்களுக்கு முகத்தில் வளரும் தாடியை, எப்போது பார்த்தாலும் வீட்டில் இருக்கும் அம்மாவோ அல்லது மனைவியோ, அடிக்கடி ஷேவ் செய்ய சொல்வார்கள். ஏனெனில் ஷேவ் செய்தால் ஒரு நல்ல டீசன்ட் லுக் இருக்கும் என்பதாலேயே. அதிலும் பொதுவாக பெண்களுக்கு நல்ல டீசன்ட் லுக்கில் இருக்கும் ஆண்களை என்றால் மிகவும் பிடிக்கும்.


அதுமட்டுமல்லாமல் வாழ்நாளில் முதன்முதலில் ஷேவிங் செய்பவர்களுக்கு எப்படி ஷேவிங் செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியாமல் இருக்கும். ஆகவே நல்ல டீசன்ட் லுக்கைப் பெற, முகத்தில் வளரும் தாடியை நன்கு சுத்தமாக, எந்த ஒரு கீறலும் முகத்தில் விழாமல், அழகாக ஷேவ் செய்ய சில டிப்ஸ்-ஐ அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முகத்தில் தாடியின் அளவை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். தாடியானது குறைவாக இருந்தால், அவற்றை எளிதில் ட்ரிம் அல்லது ஷேவ் செய்யலாம். ஆனால் நீளமாக இருந்தால், அவற்றை முற்றிலும் நீங்குவது என்பது கடினமான ஒன்று. மேலும் நீக்க நினைத்தால், ரேசரில் இருக்கும் பிளேடுகள் பாதிக்கப்படும். ஆகவே அப்போது அந்த நீளமான முடியை ஒரு கத்திரிக்கோலால் ட்ரிம் செய்துவிட்டு, பின்பு ஷேவ் செய்ய வேண்டும்.

ட்ரிம் செய்யலாம் என்று நினைத்தால், முதலில் தாடி ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஈரத்துடன் இருந்தால், முடி வேரோடு வந்துவிடும். பின் அந்த இடம் புடைத்தோ அல்லது சிவப்பு நிறத்திலோ காணப்படும். மேலும் ட்ரிம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ட்ரிம் செய்ய எலக்ட்ரிக் ட்ரிம்மரை வாங்கியோ அல்லது கைகளில் செய்யத் தெரிந்தால் கத்திரிக்கோலிலோ செய்யலாம். ஆனால் எலக்ட்ரிக் ட்ரிம்மரில் செய்வதே சிறந்தது.

ட்ரிம் செய்தப் பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, முகத்தை மென்மையாக வைக்கும். ஆனால் சூடான தண்ணீரில் கழுவிட வேண்டாம். ஏனென்றால் அது முகத்தில் அரிப்புகளை ஏற்படுத்தும். மேலும் முகத்தை கழுவியப் பின் மென்மையான துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.

ஷேவிங் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் நனைக்க வேண்டும். அவ்வாறு நனைத்து, முகம் ஈரமாக இருக்கும் போதே, ஷேவிங் ஆயிலை முகத்திற்கு தடவ வேண்டும். ஏனெனில் அந்த ஆயில் ஈரமில்லாமல் இருக்கும் முடியையும் ஈரமாக்கும். மேலும் இந்த ஆயில் ஷேவ் செய்யும் போது மிகவும் மென்மையாக முடியை நீக்கும். இதனால் ரேசரால் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

ஷேவிங் ஆயிலை முகத்திற்கு தடவியப் பின், ஷேவிங் கிரீமை ஷேவிங் பிரஷ்ஷில் வைத்து முகத்திற்கு தடவ வேண்டும். பின் சிறிது தண்ணீரை நனைத்து, முகத்தில் மறுபடியும் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் ஊற விடவும். ஏனெனில் இதனால் கடினமாக இருக்கும் முடி மென்மையாக மாறும். இதனால் ஈஸியாக ஷேவ் செய்யலாம்.

ஷேவ் செய்வதற்கு ரேசரை எடுத்தப் பின்னர், அதில் இருக்கும் பிளேடு கூர்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் ஷேவ் செய்யும் போது, முக்கியமாக அழுத்தி செய்துவிட வேண்டாம். இல்லையென்றால் முகத்தில் இரத்தக் காயத்தை பார்க்க நேரிடும். ஆகவே ரேசரை எடுத்து முகத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, பின்னர் நீரில் நனைத்து, மறுபடியும் மற்றொரு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். எப்போதும் சுத்தம் செய்யும் போதும், ரேசரை கீழ்நோக்கியே சுத்தம் செய்ய வேண்டும்.

ஷேவிங் முற்றிலும் முடிந்த பின்னர், உள்ளங்கைகளால் வெதுவெதுப்பான நீரில் நனைத்து, ஷேவ் செய்த இடத்தில் வைக்க வேண்டும். மேலும் இப்போது ஏதேனும் விடுபட்ட முடி உள்ளதா என்று பார்த்து, முடி இருந்தால் சுத்தம் செய்துவிடவும்.

மேற்கூறிய அனைத்தும் முடிந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, பின்னர் ஷேவிங் பாம் அல்லது ஷேவிங் லோசனை தடவ வேண்டும். அதிலும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால், முகச்சருமமானது வறட்சி அடையாமல், ரேசர் பயன்படுத்தியதால் அரிப்போ அல்லது எரிச்சலோ ஏற்படாமல் இருக்கும். மேலும் முகமும் பொலிவோடும், அழகோடும் காணப்படும்.

Disqus Comments