.

Sunday, August 3, 2014

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிமுறைகள்

நோய் எதிர்ப்பு

பாக்டீரியாக்கள் நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் உள்ளன. அவை எல்லா நேரங்களிலும் நமது உடலில் இருக்கின்றன.

நமது மூச்சுக் காற்று அல்லது நம் தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன.

ஆனால் அவற்றில் இருந்து ரத்த வெள்ளையணுக்கள் நம்மை பாதுகாக்கின்றன. இவை `பாகோசைட்' என்று அழைக்கப்படுகின்றன.

இவை நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகின்றன. பாகோசைட் பாக்டீரியாக்களை எப்படி கொல்கிறது என்று தெரியுமா?

முதலில் இது பாக்டீரியாவை நேருக்கு நேர் சந்திக்கிறது. பின்னர், பாக்டீரியா ரத்தத்தால் பக்குவமாக்கப்படுகிறது. அதன்பின்னர்தான் பாக்கோசைட் பாக்டீரியாவை அழிக்கிறது.

ரத்தத்தில் இருந்து கொண்டு நுண்ணுயிரிகளைப் பதப்படுத்தும் பொருளுக்கு `ஆப்ஸனின்' என்று பெயர். ரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும்.

ரத்தம், பாகோசைட், ஆப்ஸனின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால், உடலினுள் பாக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில், உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை ‘வரு முன் காப்போம்’ என்பதுதான் தலைசிறந்த வழி.

நோய் தாக்குதலுக்கு ஆளாகி, அவஸ்தைபட்டு, பின்னர் அதிலிருந்து விடுபட நடவடிக்கை மேற்கொள்வதைவிட, வரும்முன் காப்பதே சிறந்தது.

இன்றைய ரசாயன உலகில், புதிது புதிதாக நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வுகள் குறித்த ஆய்வுகளும் மறுபுறம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வருமுன் காத்துக் கொள்ள பல பரிந்துரைகளை டாக்டர்களும் வல்லுனர்களும் பட்டியலிடுகின்றனர். இந்தப் பட்டியலில் இயற்கையின் கொடை அதிகம்.

இந்த வரிசையில் மஷ்ரூம் எனப்படும் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மார்பக மற்றும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோயில் இருந்து காளான் பாதுகாப்பு அளிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறைந்த கலோரியை கொண்ட இது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய்த்தாக்குதல் வாய்ப்புகள் குறையும். சைவ உணவான காளானில் மீன்எண்ணெய்க்கு நிகராக வைட்டமின் டி சத்து மிக அதிக அளவில் உள்ளது. இந்த சத்து நேரடியாகவும் உடனடியாகவும் காளானில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் இயற்கையான நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது. இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில்நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட்டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின்
எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்துபோராடஉதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை
அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா
ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில்
கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக
பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்புதன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக் குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன.

இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலைவிட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது.

மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியா சான்தைன்’ மற்றும் “லூட்டீன்” ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன.

இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலும், வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு திறன் இது போன்ற உணவு பழக்கங்களினால் அதிகரிக்கிறது.
Disqus Comments