ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது பாடல்களைக் கேட்கும் பழக்கமோ உண்டா உங்களுக்கு? வாங்க, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம்.
எல்லா நேரமும் காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு பேசுவதும் இசையைக் கேட்பதும் உளவியல் ரீதியாக ஒருவரைப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி ஹெட் போனோடு திரிபவர்களுக்குக் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படவும், தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உச்சகட்டமாக ஹெட் போனை மாட்டிக்கொண்டு சாலைகளையும் ரயில் பாதைகளையும் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் அபாய மணி அடிக்கின்றன.
''செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும், அதனால் ஹெட் போனைப் பயன்படுத்துங்கள்!'' என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் யோசனை சொன்னது உண்மைதான். ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு பிரச்னைக்கு கொண்டுசென்றுவிடும் என்றும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
தொடர்ந்து ஹெட்செட் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை நிபுணர் எம்.ராஜ்குமார் விளக்கினார்.
''பொதுவாக மனிதனின் காதுகளின் உட்பகுதியில் இருந்து தினமும் ஒரு குண்டுமணி அளவுக்கு மெழுகு வடிவில் இருக்கும் அசுத்தம் வெளியேறும். இது இயற்கையானது. தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்க ஆரம்பிக்கும். அது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பையும் நமைச்சலையும் தரும். அதுபோன்ற வேளைகளில் 'பட்ஸ்’ பயன்படுத்தும்போது காது புண்ணாகிவிடும் வாய்ப்பு உள்ளது. இதற்கு 'டெலிபோன் இயர்’ என்றே பெயர் இருக்கிறது.
தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்துபவர்களுக்கு 'சென்ஸரி நியூரல் லாஸ்’ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும், காதுக்குள் இரைச்சல் கேட்கும்.
அதிக அதிர்வினால் செவி மடலும் பாதிப்படையும். காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதோடு நாளடைவில் காது கேட்கும் திறன் முற்றாகப் பழுதாகும். இதைக் குணமாக்க சிகிச்சை முறைகளே கிடையாது. ஒரே தீர்வு காது கேட்கும் கருவி பொருத்திக்கொள்வதுதான். சாதாரணமாக வயதாவதன் காரணமாகத்தான் இந்த பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஹெட்செட் பழக்கத்தினால் தற்போது இளவயதிலேயே இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன'' என்றார்.அதிகமாக ஹெட்செட் பயன்படுத்தினால் மன ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த மனநல மருத்துவர் அருள் பிரகாஷ் அதை உறுதிப்படுத்துகிறார்.
''ஹெட்செட் பயன்படுத்தியபடி ஒருவர் தன் பணியில் ஈடுபடும்போது அவரின் கவனம், தான் செய்யும் வேலையில் குவியாது. இதனால் அந்தச் செயல் முழுமையாக நடைபெறாது. இவர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையை மெதுவாகத்தான் செய்வார்கள். இதனால் நேர விரயமும் ஏற்படும். நகம் வெட்டுவதில் இருந்து கார் ஓட்டுவது வரை எதுவாக இருந்தாலும் அவர்களின் கவனக்குறைவு - பிரச்னையில் முடிந்துவிடும். இன்று நடக்கும் சாலை விபத்துகளில் கணிசமான விபத்துக்கள் ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால்தான் ஏற்படுகிறது. சிலர் ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அப்போது சாப்பாட்டில் அறவே கவனம் இருக்காது. இதுவும் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.
ஹெட் போன் இசைக்கு அடிமையானவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மனம்விட்டுப் பேச வேண்டிய தருணங்களைத் தவற விட்டுவிட்டுத் தனிமையிலேயே முழ்கிக்கிடப்பார்கள். இவர்கள் தங்களது உறவினர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால்கூட மனம்விட்டுப் பேசவோ சிரிக்கவோ மாட்டார்கள். இதனால் குடும்பத்திலும் உறவுகள் மத்தியிலும் தவறான அபிப்ராயங்கள் ஏற்படும்.
சிலர் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நண்பர்களுடனோ குடும்பத்தினருடனோ மனம் விட்டுப் பேசிப் பிரச்னையைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து ஒரு தற்காலிகமான ஒரு விடுதலை வேண்டி ஹெட் செட் அணிந்துகொண்டு பாட்டுக் கேட்க ஆரம்பிப்பார்கள். அந்த பிரச்னையில் இருந்து தாம் தப்பித்துவிட்டதாக நினைப்பார்கள். அப்படியே எண்ணிக்கொண்டும் இருந்துவிடுவார்கள். ஆனால் மீண்டும் அந்தப் பிரச்னை வெடிக்கும்போது அவர்களால் திடீரென முடிவெடுக்க முடியாது. இதுபோல வரிசையாகப் பல பிரச்னைகள் அவர்கள் மனதில் குவிந்து அவர்களை பெரும் மன அழுத்தத்துக்கு ஆட்படுத்தும்.
இல்லாத ஓசை நமக்கு மட்டும் கேட்பது போலத் தோன்றும். இது ஒரு மன நோய். சிலருக்கு ஹெட்செட்டைக் கழட்டிய பிறகும் காதுகளில் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும், ரிங்டோன் ஒலிப்பது போலவும் தோன்றும். இது தொடர்ந்தால் நாளடைவில் 'ஆடிட்டரி ஹாலுசினேஷன்’ எனும் மன வியாதிக்கு ஆளாகிவிடுவார்கள். கால் சென்டரில் வேலைச் செய்பவர்களுக்கும் இது அதிகமாக ஏற்படும். சிந்தனாசக்தி குறையும். தொடர்ந்து ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளையின் செயல்திறன் குறையத் தொடங்கும். எந்நேரமும் பாடல் கேட்கும்போது இயல்பாக மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் செயல் பாதிப்படைகிறது'' என்கிறார் அருள் பிரகாஷ்
ஐய்பாட் உள்ளிட்ட சாதனங்களில் பாடல்கள் கேட்கும் இளம்பெண்கள் வெகுவிரைவில் காது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்' என, புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர்கள், இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் கேட்கும் திறன்' பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா முழுவதும் இருந்து பலபேர் கலந்துகொண்ட ஆய்வின் முடிவில், அய்பாட் போன்றவற்றில் தொடர்ந்து பாடல்கள் கேட்பதால், இளைஞர்களை விட இளம்பெண்கள் வெகுவிரைவாக கேட்கும் திறனை இழந்து விடுவதாக தெரிந்துள்ளது. ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் எலிசபெத் ஹெண்டர்சென் இதுகுறித்து கூறியதாவது: ஆய்வில் பங்குபெற்ற அனைவருக்கும் கேட்கும் திறன் பற்றிய சோதனை நடத்தப்பட்டது. அதில், இளைஞர்களை விட, 17 சதவிகித அளவிலான இளம்பெண்களுக்கு கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதுதான் கேட்கும் திறன் குறைவதற்குக் காரணம் என தெரிந்தது. கடந்த 1980ஆம் ஆண்டுகளில் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பது என்பது 20 சதவிகிதமாக இருந்தது. 1990-களில் இன்னும் அதிகரித்து 35 சதவிகிதமானது. இப்போது, செல்போன், அய்பாட், டிராய்ட், பிளாக்பெர்ரி என விதவிதமான சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர் 24 மணிநேரமும் ஹெட் போன்களில் பாடல்கள் கேட்டபடியே உள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும் பாதிப்புகள் நிச்சயம் என்றாலும், இளம்பெண்கள் தான் வெகுவிரைவில் காதுகேட்கும் திறனை இழக்கின்றனர். -இவ்வாறு எலிசபெத் ஹெண்டர்சென் கூறினார்
ஹெட்செட் என்பது அடுத்தவருக்கு நாம் தொந்தரவு தராமல் பாடல் கேட்பதற்காகவும் தொலைபேசியில் பேசுவதற்காகவும் பயன்படுத்த வேண்டிய ஒரு கருவி. தயவுசெய்து அதைக் காதில் மாட்டிக்கொண்டு இருப்பதே ஒரு ஃபேஷன் என்று மாற்றிவிடாதீர்கள்!