.

Friday, July 25, 2014

ஆன்ட்டிபயாடிக் விஷயத்தில் அறியாமை வேண்டாம்!


கடந்த சில வருடங்களில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுவாகக் குறைந்து வருகிறது. காரணம், நோய்க்கான உண்மையான காரணம்  தெரியாமல் மக்கள் தாமாக செய்து கொள்கிற சுய மருத்துவம். குறிப்பாக ஆன்ட்டிபயாடிக் உபயோகிப்பதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற  மக்களின் அறியாமை.



உலக அளவில் மருத்துவர்களாலும் நோயாளிகளாலும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் 50 சதவிகிதம் தவறாக உபயோகப்படுத்தப்படுகின்றன. 53 சதவிகித  மக்கள் தாமாகவே ஆன்ட்டிபயாடிக் வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களில் 4ல் ஒருவர் அதை முழுமையாக எடுத்து முடிப்பதில்லை. 70 சதவிகித  மருத்துவர்கள் ஜலதோஷம் போன்ற மிகச் சாதாரண பிரச்னைகளுக்குக் கூட அனாவசியமாக ஆன்ட்டிபயாடிக்கை பரிந்துரைக்கிறார்கள்.

50 சதவிகித மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர்களின் சீட்டு இன்றி, ஆன்ட்டிபயாடிக் விற்கிறார்கள். இன்னும் இப்படி ஏகப்பட்ட புள்ளிவிவரங்களை  அடுக்குகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று. தேவையற்ற நேரத்தில், தேவையற்ற விஷயங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிற  ஆன்ட்டிபயாடிக், நோய்க்குக் காரணமான கிருமி களை எதிர்த்துப் போராடுவதற்கு பதில், அந்தக் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, அவற்றை  மேலும் பலசாலிகளாக மாற்றிவிடும். பலவகை ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வீரியமிழந்து வருவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகவும்  இதுவே முக்கிய காரணம். ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்வதில், படித்த, படிக்காத எல்லா மக்களுக்கும் தெளிவோ, விழிப்புணர்வோ இல்லை என்பதே  உண்மை.

ஆன்ட்டிபயாடிக் என்பவை என்ன? அவற்றின் வேலை என்ன? அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளும் முறை என்ன? விளக்கமாகச் சொல்கிறார் பொது  மருத்துவரும், ஆதரவு சிகிச்சை நிபுணருமான ரிபப்ளிகா.

‘‘அந்தப் பெண்ணுக்கு 24 வயது. ஒருசில மாதங்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஆரம்பித்திருக்கிறது. மருத்துவரைப் பார்க்காமல் அவராகவே  காய்ச்சலுக்கு மருந்து வாங்கிப் போட்டிருக்கிறார். ஒரு வாரம், பத்து நாளாகியும் காய்ச்சல் நிற்கவில்லை. திடீரென குறைவதும், திடீரென  அதிகரிப்பதுமாக இருந்திருக்கிறது. வேறு வேறு மருந்துக் கடைகளில், வேறு வேறு மருந்துகள்(அவற்றில் ஆன்ட்டிபயாடிக்ஸும் அடக்கம்) வாங்கி  தொடர்ந்து சாப்பிட்டிருக்கிறார்.

ஒரு மாதமாகியும் அவருக்குக் காய்ச்சல் விட்டபாடாக இல்லை. ஒரு கட்டத்தில் அவரது நடவடிக்கைகளில் மாற்றம்... வித்தியாசமாக  நடந்துகொள்வதைப் பார்த்த பிறகுதான் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அவருக்கு வந்திருப்பது  மூளைக்காய்ச்சல் என்றே தெரிய வந்திருக்கிறது. தப்பும் தவறுமாக அவர் எடுத்துக்கொண்ட சுய மருத்துவத்தின் விளைவாக அவரது மூளை  பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வர, இப்போது அந்தப் பெண் மனநல சிகிச்சையையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். நம்மைச் சுற்றி இப்படிப் பலரைப்  பார்க்கலாம்.

தொற்றக்கூடிய கிருமிகளால் பரவுவது, தொற்றாதவை என நோய்கள் இரண்டு வகை. தொற்றக்கூடிய கிருமிகள் எனப் பார்த்தால் பாக்டீரியா, வைரஸ்,  ஃபங்கஸ் எனப்படுகிற பூஞ்சை, பாராசைட்ஸ் போன்றவை. இவற்றில் பாக்டீரியா என்பது ஒருவகையான நுண்ணுயிரி. தண்ணீர், காற்று அல்லது  நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்தெல்லாம் பரவும். வைரஸ் என்பது காற்றின் மூலமும், மற்ற நோயாளிகளிடமிருந்தும் பரவும். பூஞ்சைத் தொற்று  என்பது சருமத்தில் தடிப்பு, வாய்ப்புண், குடல் புண்ணாகப் பிரதிபலிக்கும். பாராசைட்ஸ் என்பது பூச்சிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் பரவுவது. இதய நோய்கள், புற்றுநோய், ஒவ்வாமை போன்றவை தொற்றாத நோய்கள் பட்டியலில் வரும்.

ஆக தொற்றக்கூடிய, தொற்றாத இந்த இரண்டு வகை நோய்களுக்குமே காய்ச்சல் என்பது வரும். இன்னும் சொல்லப் போனால் மாரடைப்பின் போதும்,  மூளை நரம்பு வெடிக்கும் நேரத்திலும், தைராய்டு காரணமாகவும், ருமாயிட்டாயிட் ஆர்த்ரைட்டிஸிலும்கூட காய்ச்சல் வரலாம்.நம் மக்களோ காய்ச்சல்  என்றாலே அது ஏதோ இன்ஃபெக்ஷன் என்றும், உடனடியாக ஆன்ட்டிபயாடிக் கொடுத்துதான் சரி செய்ய வேண்டும் என்றும் காலங்காலமாக தவறான  எண்ணத்திலேயே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆன்ட்டிபயாடிக் என்பவை, காய்ச்சலைக் குறைப்பதோடு இல்லாமல் சர்வரோக  நிவாரணியாக வேலை செய்யும் என்கிற எண்ணம்.

நம் உடலில் உண்டான பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடும் மருந்துகளே ஆன்ட்டிபயாடிக். பாக்டீரியாவை கொல்லவோ, அவற்றின்  வளர்ச்சியைத் தடுக்கவோ உதவக்கூடியவை இவை. பாக்டீரியா தவிர, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகளுக்கு எதிராகவெல்லாம் இது வேலை செய்யாது. நம் உடலில் ஏதோ ஒரு இன்ஃபெக்ஷன் தொற்றுகிறது என வைத்துக் கொள்வோம். உடலில் உள்ள இயல்பான எதிர்ப்பு சக்தி அதனுடன் போராடி அதை  வெளியேற்றப் பார்க்கும். அதன் விளைவாக காய்ச்சல் வரும்.

ஓரளவு மிதமான காய்ச்சல் என்றாலோ, ஒருநாள் வரை இருக்கிற காய்ச்சல் என்றாலோ உடனே அதற்கு மருந்து தேவையில்லை. எனவே, லேசான  காய்ச்சல் எட்டிப் பார்த்தாலே, உடனே ஆன்டிபயாடிக்கை தேடி ஓட வேண்டியதில்லை. சாதாரண சளி, காய்ச்சலுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக்  அவசியமில்லை. 3 நாட்களுக்கு மேலும் காய்ச்சல் தொடர்ந்தாலோ, நெறி கட்டியிருந்தாலோ, தலைவலி மற்றும் குளிர் இருந்தாலோ மருத்துவரை  அணுக வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

காய்ச்சலுக்கும், மற்ற அறிகுறிகளுக்கும் பாக்டீரியா தொற்றுதான் காரணமா என்பது மருத்துவருக்குத் தெரியும். அது உறுதி செய்யப்பட்டால் அவர்  ஆன்ட்டிபயாடிக்கை பரிந்துரைப்பார். அப்படி ஒரு பிரச்னைக்காக மருத்துவர் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கும் போது, அதை மருத்துவர் சொன்னபடி  முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு அந்த மருந்தை 7 நாட்களுக்கு, தினசரி 3 வேளைகள் சாப்பிடச் சொல்லியிருப்பார். 4  நாட்களில் நோய் குணமாகியிருக்கும். உடனே மருந்து சாப்பிடுவதை நிறுத்துவது மிகப் பெரிய தவறு. அப்படிப் பாதியிலேயே நிறுத்தினால், அந்த  பாக்டீரியா குறிப்பிட்ட அந்த மருந்தைத் தாங்கிக்கொண்டு மீண்டும் வளரக்கூடிய சக்தியைப் பெறும்.

இதனால் பிரச்னை மறுபடி தீவிரமாவதோடு, அடுத்த முறை அதே பிரச்னைக்கு அதே ஆன்ட்டிபயாடிக் மருந்து கொடுத்தால் வேலை செய்யாது.  ஆன்ட்டிபயாடிக் மருந்தை எதிர்க்க அது ஒரு குழுவாக உருவாகும். ஆன்ட்டிபயாடிக் ரெசிஸ்டென்ட் பாக்டீரியா எனப்படுகிற இவற்றை எந்த  ஆன்ட்டிபயாடிக்காலும் கட்டுப்படுத்தவோ, கொல்லவோ முடியாது. ஆன்ட்டிபயாடிக் கொடுத்தாலுமே, இந்த வகை பாக்டீரியா பல்கிப் பெருகி உடலுக்குள்  உயிர் வாழும். இப்படிப் பல வகையான ஆன்ட்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களை ‘மல்ட்டி ரெசிஸ்டென்ட் ஆர்கானிசம்’ என்று  சொல்கிறோம்.

குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆன்ட்டிபயாடிக் எடுப்பதும் தவறுதான். பிரச்னைக்குக் காரணமான பாக்டீரியாக்களை தீர்த்துக் கட்டிய மருந்து, அதன்  பிறகு நம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடும். இதற்கு றிsமீuபீஷீனீமீனீதீக்ஷீணீஸீஷீus நீஷீறீவீtவீs என்று பெயர். சில வகைப் பிரச்னைகளுக்கு ஆன்ட்டிபயாடிக் தேவைப்படாது. ஆனாலும், அரைகுறை ஞானத்தில் நாமாக அதைச் சாப்பிடுகிற போது, இருக்கும்  பிரச்னை இன்னும் தீவிரமாகும். தேவையில்லாமல் ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்கிற போது, 2 நாட்களில் குணமாகிவிடக் கூடிய பிரச்னைகள் ஒரு  வாரம், பத்து நாள் என நீடிக்கலாம்.

சில வகையான ஆன்ட்டிபயாடிக் ஒருசிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு, வாய்புண் போன்றவை வரலாம். அந்த  நேரங்களில் உடனே மருத்துவர் சரியில்லை என வேறு மருத்துவரைத் தேடிப் போவார்கள் பலர். ஆன்ட்டிபயாடிக்ஸின் பக்க விளைவுகளை  மருத்துவரிடம் சொன்னால், அவர் அதற்குத் தீர்வு சொல்வார். அதைத் தவிர்த்து ஒரு மருத்துவர் கொடுத்த மருந்துகளை பாதி சாப்பிட்டுவிட்டு, அதில்  குணமில்லை என்றதும், இன்னொரு மருத்துவரைப் பார்ப்பது, அவர் புதிதாக எழுதிக் கொடுக்கும் வேறு ஆன்ட்டிபயாடிக்கை புதிதாக ஆரம்பிப்பது... இது  எல்லாமே ஏற்கனவே சொன்னபடி, ஆன்ட்டிபயாடிக்கை எதிர்த்துப் போராடும் அளவுக்கு பாக்டீரியாக்களை பலப்படுத்தும்.

அளவுக்கு அதிகமான ஆன்ட்டிபயாடிக்கும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். எப்போது ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் போதும், அது  பிரச்னைக்குக் காரணமான கெட்ட பாக்டீரியாக்களுடன் சேர்த்து, நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழிக்கும். அதனால்தான், ஆன்ட்டிபயாடிக்  எடுக்கும்போது கூடவே பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளையோ, தயிரோ எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். தயிரில் உள்ள லாக்டோபேசிலஸ்  நல்ல பாக்டீரியாக்களை கொண்டது. இப்போது லாக்டோபேசிலஸ் கலந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் வருகின்றன. பல மருத்துவர்கள் அவற்றைப்  பரிந்துரைக்கிறார்கள். மருத்துவர்களிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்...’’

அறிந்தே ஆபத்தை நெருங்க வேண்டாம்!

பிரச்னையின் அறிகுறிகளைச் சொல்லி, மருந்துக் கடைக்காரரிடம் நீங்களாக ஆன்ட்டிபயாடிக் வாங்கி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. மருந்துக்  கடைக்காரர் மருத்துவரில்லை.

போன வாரமோ, மாதமோ உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ காய்ச்சல், ஜலதோஷம் வந்த போது, மருத்துவர் ஒரு ஆன்ட்டிபயாடிக்கை  பரிந்துரைத்திருப்பார். அதில் நோய் குணமாகியிருக்கும். அடுத்த சில நாட்களில் மறுபடி உங்கள் வீட்டில் வேறு யாருக்கோ, அதே பிரச்னை வரலாம்.  ‘அதே அறிகுறிகள்தானே... டாக்டர்கிட்ட போனா ஃபீஸை பிடுங்கிட்டு, மறுபடி அதே மருந்தைத்தான் எழுதிக் கொடுக்கப் போறார்’ என்கிற நினைப்பில்,  அதே ஆன்ட்டிபயாடிக்கை வாங்கி உபயோகிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை, ஒவ்வொருவருக்கு உடல்நலமின்றி போகும் போதும், பரிசோதித்து,  காரணங்கள் தெரிந்த பிறகே மருந்துகள் எடுக்க வேண்டும். அதே போல பெரியவர்கள் சாப்பிடுகிற மருந்தின் அளவைப் பாதியாகக் குறைத்துக்  குழந்தைகளுக்குக் கொடுப்பதும் மிக ஆபத்தானது. குழந்தைகள் அரை மனிதர்கள் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

ஐசியு எனப்படுகிற தீவிர சிகிச்சைப் பிரிவில் நாள்கணக்காக இருக்கிற நோயாளிகளுக்கு, வழக்கத்தைவிட அதிகளவில் ஆன்ட்டிபயாடிக் தேவைப்படும்.  மருத்துவமனைக்கென்றே சில பாக்டீரியா கிருமிகள் இருக்கும். அவற்றின் பாதிப்பும் அந்த நோயாளிகளுக்கு இருக்கும். எனவே, அவர்களுக்கு சாதாரண  ஆன்ட்டிபயாடிக் கொடுத்தால் பலனிருக்காது.


Disqus Comments