சுருக்கங்கள் துணியில் இருந்தாலும் சரி, சருமத்தில் இருந்தாலும் சரி அது தோற்றத்திற்கு இழுக்குதான். அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்குக் கவலையளிக்கும் ஒரு விஷயம் இந்த சரும சுருக்கம். சரும சுருக்கங்களைப் போக்க சந்தையில் குதித்திருக்கும் அழகு சாதனப் பொருட்கள் ஏராளம்.
இந்த க்ரீமை பயன்படுத்தினால் சரும சுருக்கங்கள் ஒரு வாரத்தில் போய்விடும், ஒரு மணி நேரத்தில் போய்விடும் என்று இவர்கள் அடிக்கும் விளம்பரக் கூத்துக்களும் ஏராளம். விளம்பரங்களை உண்மை என்று நம்பி, இதில் பணத்தைத் தொலைப்பவர் பலர். அப்படியென்றால் சரும சுருக்கத்தைத் தடுக்கவே முடியாதா என்றால்? நிச்சயம் முடியும்!!. சரும சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு , அதை தவிர்ப்பதற்கான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதோ, தோல் சுருக்கங்களைத் தடுப்பதற்கான சில எளிய வழிகள்.
அழகை மேம்படுத்த உதவுவதாகக் கருதப்படும் அழகு சாதனப் பொருட்களே சருமத்தில் சுருக்கங்களையும் ஏற்படுத்தும் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம். அது தான் உண்மை! சந்தையில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களில் செயற்கை வேதியியல் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தின் தன்மையை பாதிக்கும் செயற்கை உரங்களைப் போல, அழகு சாதனப் பொருட்கள் சருமத்தை பொலிவிழக்கச் செய்து, நாளடைவில் சுருக்கங்களை உண்டாக்கிவிடும். எனவே முடிந்த அளவு இந்த மேக்-கப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அவசியமெனில் நமது பாரம்பரியமான கடலை மாவு, எலுமிச்சை போன்ற இயற்கைப் பொருட்களைக் பயன்படுத்தலாம்.
சூரிய ஒளி சருமத்தை பாதித்து சுருக்கங்களை ஏற்படுத்த வல்லது. அதிகமாக வெயிலில் அலைந்தால், கண்களைச் சுற்றி கருவளையங்களையும், உதடுகளில் சுருக்கங்களையும் உண்டாக்கும். எனவே வெயிலில் வெளியே போக நேர்ந்தால், சருமத்திற்கு தகுந்த சன் ஸ்க்ரீன் க்ரீம்மை போட்டுக் கொண்டு செல்வது நலம்.
நம் உடம்பில் தேவையான அளவை விட நீர்ச்சத்து குறையும் போது, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் என்பது தெரியுமா?! இறந்த செல்களை வெளியேற்றுவதும், புதிய செல்களை பிறப்பித்துக் கொண்டே இருப்பதும், சருமத்தின் இயல்பு. இதற்கு நீர்ச்சத்து மிக அவசியம். உடம்பில் நீர்ச்சத்து குறையும் போது, சருமம் வறண்டு சுருக்கங்கள் உண்டாகும். இதைத் தடுக்க அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது அவசியம்.
புகைப்பிடிப்பவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். உடம்பில் இரத்த ஓட்டத்தை குறைத்து, கருவளையங்களையும், சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்தும்.கேட்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும், இதைத் தடுப்பதற்கான ஒரே வழி புகைப்பிடித்தலை நிறுத்துவது மட்டுமே.
பளபளப்பான சுருக்கமில்லாத சருமத்திற்கு சரியான உணவுப் பழக்கம் மிக முக்கியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
ஆரோக்கியமான உணவு சருமத்தை இளமையாகவும், சுருக்கமற்றதாகவும் வைத்திருக்கும்.
முதுமை அடையும் பொழுது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறையும். இதனால் சருமம் வறண்டு சுருக்கங்கள் தோன்றும். எனினும் வயதாவதை தடுக்க முடியாது என்பதால், முடிந்த அளவு சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க முயற்சி செய்யலாம். இதற்கு சந்தைகளில் கிடைக்கும் தரமான மாய்ஸ்சுரைசரையை வாங்கி பயன்படுத்துவது பலன் தரும்.
சிலர் முகத்தை சாதாரணமாக வைத்திருக்காமல், ஏதேனும் சேஷ்டை செய்து கொண்டே இருப்பார்கள். அதிகமாக முகத்தின் தசைகளுக்கு வேலை கொடுத்தால் சுருக்கங்கள் அதிகமாக தோன்றும். அதிகம் சிரிப்பவர்களுக்கு கண்களின் இருபுறம் சுருக்கங்கள் தோன்றுவதை கவனித்து இருக்கலாம். சரியான யோகா பயிற்சி மூலம் இந்தப் பிரச்சனையைத் தடுக்க முடியும்.
காபி, டீ இவை இல்லாமல் ஊரில் பல பேரால் உயிர் வாழவே முடியாது. ஆனால் இவைகளில் இருக்கும் காஃப்பைன் சருமத்தில் சுருக்கங்களை உண்டாக்கும். எனவே முடிந்த அளவு காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது சருமத்திற்குநல்லது.