.

Thursday, May 15, 2014

மினரல் வாட்டர் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை



'தவிச்ச வாய்க்குத் தண்ணீர்’ என்ற நிலை மாறி, தண்ணீரைக் கூட பணம் கொடுத்துதான் வாங்கவேண்டி இருக்கிறது. அப்படியே வாங்கினாலும், குடிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இருக்கிறதா என்றால், அதுவும் சந்தேகம்தான்.


இன்று, சாமானியர்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரித்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். பாட்டில்களில் கிடைக்கும் குடிதண்ணீர் சுகாதாரமானதுதானா? எத்தனை நாட்கள்வரை அதைப் பயன்படுத்தலாம்? மனதுக்குள் அலையடிக்கும் கேள்விகளை, தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வசந்த் செந்தில் முன் வைத்தோம்.

• பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

• பொது இடங்களில் விற்கும் பாட்டில் தண்ணீரின் தூய்மையை அறிவது உண்மையில் கடினம்தான். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் எண் போன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்காது. உரிய விவரங்கள் உள்ள பாட்டில் தண்ணீரைப் பார்த்து வாங்குங்கள்.

• பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது. இரண்டு நாட்கள் வரை கிருமிகள் வளராது. 3 நாட்களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம்பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்புண்டு. எனவே, குழாயில் பிடித்ததும் வடிகட்டி 20 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது.

• கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரைக் கலப்பதும், நீரைக் கொதிக்கவைக்காமல் வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளரவைக்கும். உஷார்!

• பாட்டிலில் அடைக்கப்பட்டக் குடிநீர் பாட்டிலின் மூடியைத் திறந்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஏனெனில், பாட்டிலில் தண்ணீர் அடைக்கப்பட்ட பிறகு, ஏற்படும் கிருமித் தொற்றை அழிக்கவல்ல கிருமி நாசினி (குளோரின் போன்றவை) இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளைகள்கூடக் கிருமித்தொற்றுக்கு வழிவகை செய்துவிடும்.

• வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிகளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

• தண்ணீரை வடிக்கட்டிக் கொதிக்க வைத்து அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் 24 மணி நேரம் வரை குடிக்க மிகப் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வேறு பாத்திரத்துக்கு மாற்றும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

• கொதிக்க வைத்து ஆறிய பிறகு, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தாலும் 48 மணி நேரத்துக்கு மேல் அதைப் பயன்படுத்தக்கூடாது.


Disqus Comments