.

Friday, May 23, 2014

சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்


உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.

அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி

கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம்

கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

பீச்

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பெர்ரிப் பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பப்பாளி

பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப் பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
Disqus Comments