.

Thursday, May 29, 2014

பெண்களுக்கான சில அழகுக்குறிப்புகள்


அலுவலகம் செல்லும் பெண்கள் முகத்தை தினமும் இரவில் கிளென்சர் போட்டு சுத்தப்படுத்த வேண்டும் . கிளென்ஸரை கடைகளில் வாங்க முடியாதவர்கள், வீட்டில் உள்ள சில பொருட்களையே இதற்கு உபயோகிக்கலாம்.

வறண்ட சருமம் கொண்ட பெண்கள் எனில்...

காய்ச்சாத பால் இந்த வகை சருமத்துக்கு மிகவும் ஏற்றது. வெறும் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, விரல்களால் மென்மையாகத் தட்டி, வட்ட வட்டமாக மஸாஜ் செய்யுங்கள்.

மூன்று நிமிடங்கள் இப்படிச் செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், முகம் ‘பளிச்’சென்று இருக்கும்.

‘ஓட்ஸ் மீல்’ என கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி காய்ச்சாத பாலுடன் கலந்து ‘பேஸ்ட்’ மாதிரி செய்து கொள்ளுங்கள்.

இதை முகத்தில் தடவி வட்ட வட்டமாக விரல்களால், மூன்று நிமிடங்களுக்கு மஸாஜ் செய்யுங்கள்.

பிறகு, வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவுங்கள்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் எனில்..

சருமத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பதனால்தான் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறது. இப்படி எண்ணெய் வழிவதைத் தடுக்கும் ஒரு மிகப் பெரிய ஆயுதம், நம் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது. நன்றாக புளித்த தயிர்தான் அது!

புளித்த தயிருக்கு astringent  குணம் உண்டு. அதாவது, சருமத்தில் உள்ள பெரிய துளைகளை தயிர் மூடிவிடும். இதனால், முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியாது.

கிளென்சராக தயிரை உபயோகிக்க, ‘ஓட்ஸ் மீலு’டன் தயிரைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு, விரல்களால், வட்ட வட்டமாக மஸாஜ் செய்யவேண்டும்.

பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் முகத்தைப் ‘பளிச்’சென்று வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பல பெண்களுடைய தோற்றத்துக்கு மைனஸ் பாயிண்ட்டாக இருப்பது பருக்கள்தான். எப்படியாவது பருக்களை குணமாக்கிவிட்டாலும், அதனால் ஏற்பட்ட தழும்புகள், முகத்தில் அப்படியே நிலைத்து நின்று, முக அழகையே கெடுத்துவிடும்.

பருக்கள் வருவதை எப்படித் தடுப்பது?

சருமத்தில் எண்ணெய் அதிகமாகச் சுரப்பதால்தான் பருக்கள் வருகின்றன. வேறு பல காரணங்களாலும் பருக்கள் வரக்கூடும்.

ஹார்மோன் கோளாறுகள்தான், பருக்கள் வர முக்கியக் காரணம். டீன் ஏஜ் பெண்களுக்கு, வயதுக்கு வந்தவுடன், உடலில் சில ஹார்மோன் மாறுதல்கள் வரும். எனவேதான், இந்த வயதுப் பெண்களுக்குப் பருக்கள் அதிகமாக இருக்கிறது.

வயிற்றில் அல்சர் அல்லது வாய்வுப் பிரச்னை இருந்தாலும் கூட பருக்கள் வரலாம்.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால், சரும வியாதிகளும், மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் அதிகமாக வரும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களுடைய வேலை அதிகமான அழுத்தம் தருவதாக இருந்தால்கூட, உங்கள் முகத்தில் பருக்கள் வரும்.

வைட்டமின் பி, இரும்புச் சத்து உடலில் குறைந்தாலும் பருக்கள் தோன்றலாம்.

பருக்களைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.

உங்களுக்கென்று தனியாக சோப்பு, சீப்பு, டவல் உபயோகியுங்கள்.

மனதை எப்போதும் லேசாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் குறைபாடு (அல்லது) வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

முகத்தில் முதலில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலும் அதை உடனே கிள்ளிவிடாதீர்கள். இப்படிச் செய்தால் அந்தப் பருவிலுள்ள இன்ஃபெக்ஷன் முகத்தின் பல இடங்களிலும் பரவி, நிறைய புதுப்புது பருக்கள் வர ஆரம்பித்துவிடும்.

பருக்களைக் குறைப்பது எப்படி?

ஒன்றிரண்டு நாட்களிலேயே பருவைக் குணமாக்க முடியாது. பொறுமை ரொம்ப முக்கியம். நிறைய பெண்கள், முகத்தில் பெரும்பாலான இடங்களில் பருக்கள் வந்தவுடன்தான், சிகிச்சையையே தொடங்குவார்கள். இது ரொம்ப தப்பு.

சில பருக்கள் தலைகாட்டத் தொடங்கியவுடனேயே நாம் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடவேண்டும்.

இதற்கு நீங்கள் கடைகடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. நம் வீட்டுக்குள்ளேயே பரு பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது.

புதினா மிகவும் அற்புதமான மருத்துவக் குணம் கொண்டது. முகத்திலுள்ள எண்ணெய்ப் பசையைக் குறைத்து பருக்களை மறையச் செய்யும் ஜாலம் புதினாவுக்கு உண்டு.

புதினா இலையை அரைத்து, பருக்கள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் கழுவிவிட வேண்டும். தினமும் தொடர்ந்து இதே மாதிரி செய்து வந்தால், பருக்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிடலாம்.

புதினா கிரீம்கள் கூட கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும், முகத்தில் போடலாம்.

அதேபோல, கற்பூர எண்ணெய் உள்ள க்ரீம்களுக்கும் பருக்களைப் போக்கும் சக்தி உண்டு. இந்தக் க்ரீமை காட்டனில் தொட்டு, பருக்கள் மீது தடவி விடுங்கள். அரைமணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவி விடுங்கள்.

வீட்டில் நல்ல சுத்தமான சந்தனமும் பசு மஞ்சளும் இருந்தால் நீங்கள் எதைத் தேடியும் ஓட வேண்டியதில்லை. சந்தனம், மஞ்சள் இரண்டையும் சமமான அளவு எடுத்து, தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை பருக்களின் மீது மட்டும் தடவி, அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவுங்கள். தினமும் இதேபோல் செய்தால் உங்கள் முகம் மொசைக் தரை போல மழமழவென்று அழகாகிவிடும்.

Disqus Comments