உஷ்ணத்தினால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் சில சமயங்களில் உபாதைகள் ஏற்படுவது என்பது ஒரு சிலருக்கு இயல்பானதே. இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டாம். தனியா 100 கிராம், மிளகாய் 5 கிராம், மிளகு 3 கிராம், துவரம்பருப்பு 50 கிராம், பெருங்காயம் 5 கிராம், உப்பு வேண்டிய அளவு இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய் சேர்த்தோ அல்லது இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இதனால் உஷ்ண சம்பந்தமான வயிற்றுக் கோளாறு நீங்கும். மூலச்சூட்டினால் அவதியுறுவோர் மாங்கொட்டையை உடைத்து அதனுள்ளிருக்கும் பருப்பை அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
வயிறு உப்புசம் நீங்க சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து தெளிய வைத்து பின் அந்நீரை அருந்தலாம். அதுபோலவே வயிற்றுக் கடுப்பு நீங்க வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் போதும். சிலருக்கு வயிற்றில் பூச்சிகள் இருப்பதனால் சரிவர பசிக்காது.
இதற்கு அன்னாசிப் பழம் நல்ல மருந்தாகும். அன்னாசி பழச்சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளது. அதுபோன்றே மாங்கொட்டை பருப்பும் பூச்சிகளை ஒழிக்கும். மாங்கொட்டையை உலர்த்தித் தூள் செய்து சிறிது தேனில் குழைத்துச் சாப்பிட பூச்சித் தொல்லை ஒழியும்.
மேலும் பித்தத்தினால் ஏற்படும் தொல்லையை நீக்க இஞ்சி சாற்றில் கொஞ்சம் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் பெறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தேசிக்காய்ச் சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வயிற்றுளைச்சலுக்கு சூடான பாலில் தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து பால் முறிந்த பின் தெளிந்து வரும் நீரைப் பருகினால் போதும்... உளைச்சல் கட்டுப்படும்.