.

Sunday, March 2, 2014

சைனஸ் என்றால் என்ன?


சைனஸ் பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதால், மக்கள் பயப்படத் தேவையில்லை. வீடுகளில், 
மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால்,

மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்


1. சைனஸ் என்றால் என்ன?

நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

2. இதன் அறிகுறிகள் என்ன? மூக்கடைப்பு ஏற்படுவது ஏன்?

தலை பாரமாக இருத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அதிக தும்மல், தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகள்; முற்றிய நிலையில் தொண்டை வலியும் இருக்கும். சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு வாரம், மருந்து, மாத்திரை சாப்பிட்டால், சரியாகி விடும். தொடர்ந்து சளி இருக்குமானால், காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்திப்பது நல்லது.

3. சைனஸ் வந்தால் தீர்ப்பது எப்படி?

சளி பரிசோதனை செய்து, என்ன பாதிப்பு என கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டித்தால், எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, 'சைனஸ்' அடைப்பை சரி செய்யலாம்.
ஒரு சில நேரங்களில், சளி, கட்டியாகி விடும். மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. இதற்கு, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும். இதில், 'எண்டோஸ்கோபி' முறையில், அறுவைச் சிகிச்சை செய்து, சளி கட்டியை அகற்றி விடலாம்.

4. சளி கட்டி அறுவைச் சிகிச்சை ஒரு முறை செய்தால், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலை வரும் என சொல்லப்படுகிறதே? அது உண்மையா? வேறு என்ன நவீன சிகிச்சை முறைகள் உள்ளன?

முன்பு, 'சைனஸ் பஞ்சர்' என்ற முறையில், ஊசி மூலம் சளியை அகற்றும் முறை பின்பற்றப்பட்டது. இதில், வலி இருக்கும். பலருக்கு, திரும்ப திரும்ப எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதெல்லாம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நவீன வசதிகள் வந்து விட்டதால், பயம் தேவையில்லை. 'எண்டோஸ்கோபி' என்ற கேமரா பொருத்தப்பட்ட கருவி மூலம், வீடியோ திரையில், மூக்கின் அனைத்து பாகங்களையும், தெளிவாக பார்க்க முடியும். சைனஸ் அறைகளைக் கூட, மிகத் துல்லியமாக காட்டிவிடும். நோயின் தன்மை அறிய, நோயாளிகளுக்கு மயக்க மருந்து தராமலேயே, பரிசோதிக்க முடியும். மருத்துவமனையில் ஒரு நாள் தங்கினால் போதும். அதனால் காயமோ, தழும்புகளோ ஏற்படாது. எண்டோஸ்கோபி வழியாக சிகிச்சை பெறுவோருக்கு, மீண்டும் சைனஸ் பிரச்னை வருவதில்லை.

5. வேறு என்ன நவீன வசதிகள் உள்ளன?

லேசர் கருவி உதவியுடன், எண்டோஸ்கோபிக் முறையில், அறுவைச் சிகிச்சை செய்வது வசதியானது. இன்னும் லேட்டஸ்டாக, 'மைக்ரோ டிப்ரைடர்' எனும் கருவி வந்துள்ளது. நீண்ட கம்பி போன்ற இந்த கருவிக்குள், மிகச் சிறிய பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், சைனஸ் அறைக்குள் உள்ள சீழ்கட்டியை, வீடியோ திரையில் பார்த்து, அகற்றிவிட முடியும். மூக்கில் உள்ள சதைக்கட்டியை அகற்ற, இந்த கருவி தான் சிறந்தது.

6. சாதாரண சளி தானே என, விடுவது ஆபத்தா? டாக்டரின் ஆலோசனையின்றி மருந்து, மாத்திரை சாப்பிடலாமா?

அலட்சியமாக விட்டால் மூச்சுத் திணறலால் அவதிப்பட வேண்டி வரும். தொற்று பாதிப்புகள் வரவும் வாய்ப்புண்டு. நெற்றி சிற்றறைகளில் சேர்ந்த நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு கட்டத்தில், உயிரிழப்புக்கும் இது காரணமாகி விடும்; இதில், கவனமாக இருப்பது நல்லது. சளி பிரச்னைக்கு, மருந்து கடைகளில், மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடலாம்; ஒரு வாரத்தில் சரியாகவில்லை என்றால், காது, மூக்கு, தொண்டை நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம். மூக்குத் தண்டு வளைவு இருந்தாலும், சைனஸ் பிரச்னை வரும். அறுவைச் சிகிச்சை மூலம், மூக்குத் தண்டை சீரமைத்து விடலாம்.

7. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

வீடுகளை, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மின் விசிறிகளில் துாசி படிவது; நாய், பூனை உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் எச்சம் மற்றும் முடி இரைந்து கிடப்பது, குளிர்சாதன இயந்திர, 'பில்டரில்' துாசி படிதல் ஆகியவற்றால், பிரச்னை ஏற்படும். குளிர்சாதன இயந்திரத்தை, வாரத்திற்கு ஒரு முறை, சுத்தம் செய்ய வேண்டும். பெரிய அலுவலகங்களில், 'சென்ட்ரலைஸ்டு ஏசி' உள்ளது. இவற்றில், நிறைய துாசி படியும். இதை ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யாமல் விட்டு விடுவதால், சைனஸ் பிரச்னை வர வாய்ப்புள்ளது. 
மேலும், அலுவலகத்தில் உள்ள ஒருவர், அலர்ஜியால் பாதிக்கப்பட்டு தும்மினாலும், அதன் பாதிப்பு, அலுவலகத்தில் உள்ள எல்லாரையும் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. இது, நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

8. அலர்ஜியால் ஆஸ்துமா வருமா? குழந்தைகளுக்கு பாதிப்பு என்ன?

தொண்டை தசை (டான்சில்) வளரும்போது, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். மூக்கு, தொண்டைக்கு மேல் உள்ள, 'அடினாய்டு' அடைப்பு ஏற்படுவதால் பாதிப்பு வரும். இதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தைகள், தரமற்ற ஐஸ்கிரீம் சாப்பிடுதல், காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்காமல், சாதாரணமாக தண்ணீர் குடிப்பது, குளிர்பதன பெட்டிகளில் சரியாக அளவில் பாதுகாக்காத, 'ஐஸ்கிரீம்' சாப்பிடுவதால், சைனஸ் பாதிப்பு வரும். இதில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

9. வீடுகளை சுத்தம் செய்வதில் சிறப்புக் கவனம் தேவையா?

நிச்சயமாக... வீடுகளை வெறுமனே பெருக்கி சுத்தம் செய்து விட்டோம் என, இருப்பது சரியல்ல. தண்ணீரால், தினமும் தரையைத் துடைக்க வேண்டும். சிலருக்கு காட்டன் மெத்தை, தலையணை, அலர்ஜியை ஏற்படுத்தும். அத்தகைய வீடுகளில், 'போம்' வகையிலான மெத்தை, தலையணையை பயன்படுத்துவது நல்லது.

10. பனிக் காலங்களில் பாதிப்பு அதிகம் இருக்குமா?


பனிப் பொழிவு அதிகம் உள்ள பகுதிகள், மலை பிரதேசங்களில், அலர்ஜி பாதிப்பு அதிகம் வரும். மலர்களில் உள்ள, மகரந்த துகள்கள், இதற்கு காரணமாக அமையும். காது, மூக்கு, தொண்டைக்கும் தொடர்புண்டு. இதனால், ஒன்றில் ஏதாவது பாதிப்பு வந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளையும் பாதிக்கும். தும்மல், சளிதானே என, மக்கள் அலட்சியமாக இருப்பதை கைவிட வேண்டும்.

நன்றி

டாக்டர் ரவி கே.விஸ்வநாதன்,
இயக்குனர், ஏ.வி.எம்., மெடிக்கல் இ.என்.டி., ரிசர்ச் பவுண்டேஷன், மயிலாப்பூர், சென்னை.
போன்: 98400 31818.
Disqus Comments