.

Wednesday, March 5, 2014

உருளைக்கிழங்கு உடம்புக்கு நல்லதா?



உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்துவிடும் என்றெல்லாம் சொல்லி உங்களைப் பலரும் பயமுறுத்துவார்கள். இக்கூற்று உண்மைதானா
என்று ஆராய்ந்து பார்த்தால் துளிகூட உண்மை இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதிலும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் உணவில் உருளைக்கிழங்கு இருந்திருக்கிறது. உலகத்தில் பஞ்சம், பசி ஏற்பட்டபோதெல்லாம், கை கொடுக்கும் தெய்வமாக இருந்து, உருளைக்கிழங்கு காப்பாற்றியிருக்கிறது. உலக அளவில் அரிசி, கோதுமைக்குப் பிறகு அதிகம் பயிரிடப்படுவது உருளைக்கிழங்குதான்!


உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது. புரதம் 1.6% உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி முதலியவையும் போதிய அளவில் உள்ளன. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளன.

உங்கள் உடலில் அதிகமாகப் புளிப்பு அமிலங்கள் சேர்ந்தால் அவைகளை இது வெளியேற்றிவிடுகிறது. நிலத்தின் அடியில் தோண்டி எடுக்கப்படும் சில கிழங்குகளை விடவா, உருளைக்கிழங்கு மோசமாகப் போய்விட்டது? இல்லை! உருளைக்கிழங்கு எளிதில் செரிக்கும் தன்மை உடையது. வயதானவர்களுக்குத் தேவையான புரதம், மாவுப் பொருள்கள், சர்க்கரை, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் போன்ற அனைத்தும் உருளைக்கிழங்கு அவியலில் கிடைத்துவிடுகிறது. உருளைக்கிழங்கைத் தோலுடன் சாப்பிட்டால்தான், சத்துக்கள் கிடைப்பதுடன் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

ஸ்வீடனிலும், பிரான்சிலும் தேசிய "டிஷ்' ஆக உருளைக்கிழங்கு விளங்குகிறது. தாய்லாந்தில் உருளைக்கிழங்கு சாப்பிடாதவர் எவரும் இருக்க மாட்டார். இங்கிலாந்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் ஏராளமாக விற்பனையாகின்றன. "இங்கிலாந்து சிப்ஸ் கழகம்' என்று ஒரு கழகமே இங்கிலாந்தில் உள்ளது. வறுவல் வகைகளுக்காக நியூஜெர்ஸி ராயல் என்ற உருளைக்கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.


பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் சிறந்த "தொட்டுக்கொள்ளும்' உணவாகும். உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்ற கூற்றில் உண்மையே இல்லை. சில காய்களிலும், சில வகைக் கிழங்குகளிலும், சிலவகைக் கீரைகளிலும், சில வகைப் பருப்புகளிலும் வாயு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக நாம் அதைச் சாப்பிடாமல் இருக்கிறோமா? சாப்பிடுகிறோம். தோலுடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடும்போது, பூண்டு, மிளகு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு வாயுப் பிரச்னையே வராது.

உருளைக்கிழங்கை அளவாகச் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உங்களுடைய எடை கூடாது. தொந்தியும் வராது. உருளைக்கிழங்கு சிப்ûஸ சாப்பிட்டால் எடை கூடிவிடும். உடலும் பருத்து விடும். எனவே நீங்கள் எந்தப் பயமும் இல்லாமல் இறைவன் கொடுத்த அருட்பிரசாதமாகிய உருளைக்கிழங்கைச் சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள்!

நன்றி தாராபுரம் சுருணிமகன்
Disqus Comments