தமிழிலே " முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை" என்றொரு பழமொழியுண்டு. அது முல்லைக்கு மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களில் இதனை நாம் பார்க்க முடியும். அப்படி புறக்கணிக்கப்பட்ட பழவகைகளில் ஒன்றுதான் பப்பாளி. மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.
பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.
பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இது Caricaceae குடும்பத்தைச் சேர்ந்தது. பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.
ஆசிய நாடுகளில் சுமார் 10லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்தி 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறார்கள்.
பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தோலை நீக்கிய பின் மற்ற பழங்களை விட அதிக அளவு (75-80 சதவீதம்) வீணாகாமல் உண்ணத்தக்கதாக உள்ளது. ஆனால் இதை நீண்டநாள் பாதுகாத்து பயன்படுத்த முடியாது.
ஆப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவு கரோட்டின் சத்து உடையது பப்பாளி பழம் ஆகும். இந்த கரோட்டின் ஆனது, நமது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. 100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கி ராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குணநலன்களைப் பெற்றுள்ளது.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பொதுவாக இந்திய குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.
பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள "பப்பாயின்" என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.
இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.
பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது.
(ஆனால் பப்பாளிப் பழமானது கருக்கலைக்கும் என்பதில் அறிவியல் உண்மை இல்லையென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்). ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.
200மி.லி பப்பாளிப் பழக்கூழில் இருக்கும் சத்துக்கள் என்ன தெரியுமா?
புரதம் - 1.52 கிராம், கொழுப்பு - 0.25 கிராம், தாதுக்கள் - 1.27 கிராம், நார்ச்சத்து - 2 கிராம், மாவுப்பொருள் - 37.88 கிராம், இதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 159.6 கிலோ கலோரி.
100 கிராம் பப்பாளியின் சத்துமதிப்பு :
சத்து பப்பாளிக்காய் பப்பாளிப்பழம்
புரதம் 0.7கிராம் 0.6கிராம்
கொழுப்பு 0.2கிராம் 0.1கிராம்
தாதுக்கள் 0.5கிராம் 0.5கிராம்
நார்ப்பொருள் 0.9கிராம் 0.8கிராம்
மாவுப்பொருள் 5.7கிராம் 7.2கிராம்
ஆற்றல் 27கி.கலோரி 32கி.கலோரி
கரோட்டின் -2740மைக்ரோகிராம்
பீட்டா கரோட்டின் - 280மைக்ரோகிராம்
வைட்டமின் சி 12மி.கிராம் 57மி.கிராம்
சோடியம் 23மி.கிராம் 6மி.கிராம்
பொட்டாசியம் 214மி.கிராம் 69மி.கிராம்
இரும்புச்சத்து 0.9மி.கிராம் 0.5மி.கிராம்
சரி,பப்பாளியில் குறை சொல்ல எதுவுமே இல்லையா?
பப்பாளி விதையிலுள்ள "கார்பைன்" என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் யாரும் பப்பாளி விதையைச் சாப்பிடுவதில்லையாகையால் இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இதழில் கவர்ச்சியே இல்லையென்று ஏங்கி தவிப்போருக்கு ஒரு செய்தி : கன்னடத்தில் பறங்கி என்று அழைக்கப்படும் பப்பாளிக்கு இந்தியில் என்ன பெயர் தெரியுமா? பபிதா.