Friday, November 9, 2018

திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சில பியூட்டி டிப்ஸ்...


வீட்டில் திருமண பேச்சை எடுத்தாலே, பெண்களுக்கு முகத்தில் ஒருவித அழகு அதிகரிக்கும். அதிலும் திருமண நாளை முடிவெடித்துவிட்டால், திருமணத்தன்று அழகாக இருக்க வேண்டுமென்று பல பெண்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். ஒருவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் தான் திருமண நாள். அத்தகைய திருமண நாளன்று பெண்கள் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில் தவறேதும் இல்லை.

அப்படி உங்களுக்கு திருமணம் முடிவாகி இருந்தால், அந்நாளன்று அழகாக ஜொலிக்க கண்ட கண்ட பொருட்களைப் பயன்படுத்தாமல், ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் சருமத்தின் அழகு மட்டுமின்றி, ஆரோக்கியமும் அதிகரிக்கும். சரி, இப்போது திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் பெண்களுக்கான சில சரும பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினசரி பின்பற்றி வந்தால், நிச்சயம் திருமணத்தன்று ஜொலிக்கலாம். குறிப்பாக இவை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.

இரவு நேர பராமரிப்பு

திருமண நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து, தினமும் இரவில் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிவிட்டு, பின் படுக்க செல்ல வேண்டும். அதற்கு இரவில் படுக்கும் முன் காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். இப்படி தினமும் செய்து வர, சருமம் பொலிவோடு இருக்கும். மேலும் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தி சருமத்தை நன்கு மசாஜ் செய்து வந்தால், கன்னங்கள் நன்கு கும்மென்று இருக்கும்.

ஆரோக்கியமாக சாப்பிடவும்

அழகை அதிகரிப்பதில் உணவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் குறிப்பாக பழங்கள் தான். ஆகவே திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, அதிக காரமான உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, சாலட்டுகளை சாப்பிடத் தொடங்குங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதுடன், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, நச்சுக்கள் வெளியேறி, சருமம் இளமையுடன் காணப்படும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

திருமணத்தன்று அழகாக இருக்க வேண்டுமானால், முக்கியமாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்து தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து வாருங்கள். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது, வியர்வையானது வெளியேறி, அதன்மூலம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதுடன், இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும்.

ஃபேஸ் பேக்

குறிப்பாக பழங்கள், தயிர், முல்தானி மெட்டி மற்றும் இதர இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி முகத்திற்கு ஃபேஸ் பேக் போட வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கம். அதிலும் ஃபேஸ் பேக்கை ஒருநாள் விட்டு ஒருநாள் போடுவது சிறந்தது.

கெட்ட பழக்கங்களை தவிர்த்தல் 

ஆக்ஹால், சிகரெட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சருமத்தில் பொலிவை விரைவில் தாக்குபவை. மேலும் சிகரெட் பிடித்தால், சருமத்தில் கருப்புத் திட்டுக்கள் வர ஆரம்பிக்கும். எனவே திருமணத்தன்று அழகாக இருக்க வேண்டுமானால், 3 மாதத்திற்கு முன்பிருந்தே கெட்ட பழக்கங்களை தவிர்த்து வர வேண்டும்.

நல்ல தூக்கம்

முக்கியமான ஒன்று நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் நீங்குவதுடன், சருமம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.








Disqus Comments