Saturday, November 10, 2018

மழைக்காலத்தில் நோய்களிலிருந்து தப்பிக்க அருமையான சில வழிகள்!


இந்தியாவில் மழைக்காலம் என்றாலே ஒரு பெரும் திருவிழா தான்! பல மாதங்களாகக் கொளுத்தும் வெயிலில் வாடி வதங்கிய மக்களுக்கு மழை வந்தால் சொல்லவா வேண்டும்? எந்தக் கூச்சமும் இல்லாமல் மழையில் ஆடிப்பாடி மகிழும் மக்களை இங்கு காண முடியும்.

ஆனால் இந்த மழைக் காலத்தில் தான் நிறைய நோய்களும் நோய்த் தொற்றுக்களும், பலவிதமான உடல் சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படும். திடீர் காலநிலை மாற்றங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுவார்கள். மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஆக்ஸிஜன் அளவு குறைந்து மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட குறைகளும் ஏற்படும்.

ஆயுர்வேதமும் இதைத் தான் சொல்கிறது. குறிப்பாக நம் உடலில் உள்ள பித்தம் இந்த மழைக் காலத்தில் தன் வேலையைப் பெருமளவில் காட்டத் தொடங்கும். செரிமானக் குறைவு, அசிடிட்டி, தோல் குறைபாடுகள், முடி உதிர்தல் உள்ளிட்ட பல குறைபாடுகள் இந்தப் பித்தத்தினால் தான் மழைக் காலத்தில் ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

இதுப்போன்ற அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து, பருவ மழையை அணு அணுவாக அனுபவிக்க, இதோ சில அருமையான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்கவும் 

மிகவும் சூடான, காரமான, உப்பான, புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இதுதான் அசிடிட்டி, செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட சரியான வழி. அதேபோல் ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரங்களையும் தவிர்த்து விட வேண்டும்.

வேக வைத்த உணவுகளே சிறந்தது

 மிதமான, எளிதில் செரிக்கக் கூடிய, ஆவியில் வேக வைத்த உணவுகளை (பூசணி, சோளம், ஓட்ஸ்) உண்பதே நல்லது.

சிறப்பான எண்ணெய்கள் 

அவசியம் நெய், ஆலிவ் எண்ணெய், கார்ன் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளும் இந்த மழைக் காலத்துக்கு சிறந்தவை ஆகும். ஹெவியான கடுகு எண்ணெய், வெண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவற்றைத் அறவே தவிர்க்க வேண்டும்.

கடுமையான உடற்பயிற்சியே அவசியம் இல்லை

மழைக் காலத்தில் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை. குறிப்பாக ஓடுதல், சைக்கிள் மிதித்தல் ஆகியவை உடம்பில் பித்தத்தைத் தான் அதிகமாக்கும். வேண்டுமானால் யோகாசனம், நடைப் பயிற்சி, நீச்சல் ஆகியவை செய்யலாம்.

தெருக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் வேண்டாம் 

வெளியில் சாப்பிடும் போது மிக மிக கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். கடைகளில், குறிப்பாக நடைபாதைக் கடைகளில், திறந்து வைக்கப் பட்டிருக்கும் உணவு வகைகளை ஒருபோதும் வாங்கி உண்ண வேண்டாம்.

சுத்தம் அவசியம் 

பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின் உபயோகிக்கவும்.

கசப்பான உணவுகள் முக்கியம் 

கசப்பு தான் பித்தத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, பாகற்காய், வேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட கசப்பான ஆயுர்வேத சமாச்சாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தத்திலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

நல்லெண்ணெய் குளியல் தேவை

இந்த மழைக் காலத்தில் வாரத்திற்கு இருமுறை நல்லெண்ணெய் மசாஜ் செய்து கொள்வது மிகவும் ஆரோக்கியமானது. நல்லெண்ணெயானது சூடு என்று நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து கொள்ளலாம்.

கெட்ட குணங்களை தவிர்க்கவும்

இவை எல்லாவற்றையும் விட, கோபம், எரிச்சலடைதல், பொறாமை, ஈகோ ஆகிய குணங்களையும் நாம் விட்டொழித்து விட வேண்டும். ஏனென்றால், இவை தான் நம் உடம்பில் பித்தத்தை அதிகரிக்கின்றன. இதனால் நெஞ்செரிச்சல், சிரங்கு, சிறுநீரகத் தொற்று ஆகியவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.








Disqus Comments