.

Thursday, November 10, 2016

உடல் எடையை குறைக்கும் குடம் புளி

நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதே.

அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டதே குடம் புளி. இது என்னடா புதுசா வயித்துல புளியை கரைக்கிறாங்கன்னு நினைக்க வேண்டாம். நாம் பயன்படுத்தும் புளியை போன்று விளைச்சல் இல்லாதது. பெரும்பாலும் மலைபிரதேசங்களில் விளையக் கூடியது குடம்புளி. தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தான் அதிகமாக விளைகிறது குடம்புளி, இன்றைய நாளில் கேரள மக்கள் அதிகமா குடம்புளியை தான் பயன்படுத்தி வருகின்றனர், இந்த குடம் புளிக்கு மலபார் புளி என்று வேறு பெயரும் உண்டு.

மருத்துவ புளி என்றழைக்கப்படும் குடம் புளி:-

மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது குடம் புளி, அதனால் இதனை மருத்துவ புளி என்றும் அழைக்கின்றனர். இதனை கேரளாவில் அன்றாட சமையலுக்கே பயன்படுத்தி வருகின்றனர், இந்த குடம் புளியை சமையலில் சேர்த்து சமைத்தவுடன் புளியை வெளியே எடுத்து விடவேண்டும். நேரம் ஆக ஆக சமைத்த உணவில் புளிப்பு சுவையை அதிகரித்து கொண்டே போகும்.

நாம் புளிசேர்க்கும் அனைத்து உணவுகளிலும் குடம் புளியை சேர்ப்பதால், புளிப்பு சுவையை தருவதுடன் சிறந்த செரிமானத்தை தரவல்லதாக குடம் புளி உள்ளது.

குடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் எனும் ஆசிட் இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை படைத்தது என்பதுடன் உடலில் கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

உடல் மெலிவிற்கான தயாரிக்கப்படும் பல மருந்துகளில் பிரதான மருந்தே குடம் புளி தான். எனவே உடலை இயற்கையான முறையில் மெலிய செய்ய விரும்புபவர்கள் அன்றாட சமையலில் குடம் புளியை பயன்படுத்தி கொள்ளலாம்.

குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுபோக்கை குணப்படுத்த தரப்படுகிறது.


குடம் புளியின் வேறு சில பயன்கள்:-

குடம்புளியின் பழத்தோலையில் இருந்து சாறு எடுத்து வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக தரலாம். இந்த குடம் புளி மரத்தின் பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

கால்நடைகளின் வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குடம் புளி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர் மரத்தில் இருந்து வடியும் பாலை கெட்டிபடுத்த குடம் புளி உதவுகிறது. அதுபோல் தங்கம், வெள்ளியை பளபளக்க செய்யவும் குடம் புளி பயன்படுகிறது.

குடம் புளி உணவு வகைகள்:-

குடம்புளியை கொண்டு சாம்பார், கார குழம்பு, ரசம் போன்றவையை அன்றாடம் சமைத்து உண்ணலாம், மேலும் இதனை வெல்லத்துடன் கலந்து பானகம் போல செய்தும் சாப்பிடலாம், குடம்புளியின் பழப்பகுதியை அப்படியே பயன்படுத்தலாம், இல்லையெனில் நன்கு காய வைத்த குடம் புளி கிடைக்கின்றன அவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதே. 
Disqus Comments