.

Friday, April 3, 2015

கொழுக் மொழுக் குழந்தை அழகா? ஆபத்தா?




இன்று நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் குழந்தைகளின் கூடுதல் உடல் பருமன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கொழுகொழுவென இருப்பது என்ன அவ்வளவு கெட்ட விஷயமா என்று பலரும் நினைக்கலாம். கூடுதல் உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக உருவாக்கப் பல தரப்பிலும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும் உடல்பருமன் குறைப்பு ஆலோசகர் டாக்டர் ராஜ்குமார்பழனியப்பனிடம் பேசினோம்.


'நம் தமிழகத்தில் மட்டும் அல்ல... உலகம் எங்கும் உள்ள தாய்மார்கள் மத்தியிலும், 'கொழுகொழு என இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை’ என்ற கருத்து நிலவுகிறது. குழந்தையாக இருக்கும்போது 'பேபி ஃபேட்’ என்று சொல்லப்படும் கொழுப்பானது பெரியவர்களானதும் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். இதனால், அதிக அளவில் உணவைப் புகட்டி, அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுக்கக் கூடுதல் உடல் பருமனோடு இருக்க வழிசெய்துவிடுகின்றனர். உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளில் 4.2 கோடி குழந்தைகள் கூடுதல் உடல் பருமனுடன் உள்ளனர்.

குழந்தைகள் கூடுதல் உடல் பருமனுடன் இருப்பது என்பது, கடந்த 20, 30 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்த பிரச்னை. இந்தியாவில் 16 சதவிகிதக் குழந்தைகளும் உலக அளவில் 33 சதவிகிதக் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்கள் நம்மைப் பயமுறுத்துவதற்கு அல்ல, அபாயத்தின் தொடக்கத்தில் இருக்கின்றோம் என்று எச்சரிக்கை மணி அடிப்பதற்காகவே என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே இதை நாம் தடுக்கவில்லை எனில், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும்.

கூடுதல் உடல் பருமன் உள்ள குழந்தையை மற்றவர்கள் கேலி- கிண்டல் செய்வதன் மூலம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கூடுதல் உடல் பருமனால் சுவாசித்தலில் பிரச்னை ஏற்படலாம். உடல் பருமனாக உள்ள ஐந்து முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 70 சதவிகிதம் பேருக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில், சர்க்கரை நோய்ப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எலும்பு மூட்டு மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படலாம்.

20-30 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் நடந்தே பள்ளிக்குச் சென்றனர். தினமும் வீட்டைச் சுற்றி உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து மணிக்கணக்கில் விளையாடினர். வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட்டனர். நம்முடைய அம்மாக்கள் சமையலில் காய்கறிகள், பழங்களுக்கு உணவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளையே சாப்பிட்டார்கள். அனைத்துக்கும் மேலாக நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது என்பது அபூர்வமாக நடக்கும். அதிக ஆற்றல்கொண்ட உணவு வகைகளைச் சாப்பிட்டாலும் விளையாட்டு போன்ற உடல் உழைப்பின் மூலம் அது சமன்செய்யப்பட்டது.

ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழ். அருகில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட, பைக் தேவைப்படுகிறது. பள்ளிக்கூடப் பேருந்தில் பயணம். பள்ளியில் விளையாட அனுமதி இல்லை. பல பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானங்களே இல்லை. பள்ளிக்கூடம் முடிந்து டியூஷன் மற்றும் இதரப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவே நேரம் சரியாக இருக்கிறது. அனைத்தையும் முடித்து வீட்டுக்கு வந்தால், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் என்று ஒரே இடத்தில் உட்கார்ந்தே நேரம் செலவாகிறது.

வீட்டில் சத்தான சாப்பாட்டுக்குப் பதில் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள். இடைஇடையே அதிக அளவில் நொறுக்குத் தீனிகள். இவ்வளவும் சேர்ந்து நம்முடைய குழந்தைகளை கூடுதல் உடல் பருமன் உள்ளவர்களாக மாற்றிவிட்டது. இதற்குத் தீர்வும் உள்ளது. வாழ்க்கை முறையில், உணவு முறையில் ஒரு சில சிறிய மாற்றங்களைச் செய்தாலே போதும்... குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக மாறிவிடுவார்கள்.'' என ஆறுதல் வார்த்தவர் மேற்கொண்டும் நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பட்டியல் போட்டார்.

எதிர்காலச் சந்ததிகளை சக்தி மிகுந்தவர்களாக - சர்வபலம் கொண்டவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. கூடுதல் உடல் பருமனைக் குறைப்பது சிரமம் மிகுந்த வேலை அல்ல என்கிற நம்பிக்கை நமக்குள் விழுந்தாலே, நம் குழந்தைகளை வலுவானவர்களாக மாற்றிவிடலாம்!  

 பெற்றோர்கள் செய்ய வேண்டும்?

'கூடுதல் உடல் பருமனா? என் குழந்தைக்கா? இல்லவே இல்லை...’ இதுதான் பெற்றோர்களின் மனப்பான்மையாக உள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு ஒன்று 77 சதவிகிதத் தந்தைகளும், 33 சதவிகிதத் தாய்மார்களும் தங்களின் கொழுகொழு குழந்தை கூடுதல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதைத் தெரியாமலே உள்ளனர்.

 ஒரு குழந்தை சரியான, ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அந்தக் குழந்தையின் தாய்தான். குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி கொடுப்பதற்குப் பதில் பழங்கள், காய்கறிகளைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கலாம்.
 காலை உணவைத் தவிர்ப்பது நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற அளவை (மெட்டபாலிக் ரேட்) குறைத்துவிடும். இதனால் கொழுப்பு நம்முடைய உடலில் அதிக அளவில் தங்கிவிடுகிறது. காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பல குழந்தைகள் சாப்பிடாமலேயே சென்றுவிடுகின்றன. சில குழந்தைகள் குறைவாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். இந்த நிலையை மாற்றி, காலையில் கட்டாயம் சாப்பிடவையுங்கள்.

 குழந்தைகள் நம்மிடம் இருந்துதான் கற்கின்றன. எனவே, உணவு விஷயத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடக்கும்போது குழந்தைகளும் அதைப் பின்பற்றும்.

 உங்கள் குழந்தைக்கு பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட வாங்கிக்கொடுத்தால், அன்றைக்கு அவர்களின் விளையாட்டு நேரத்தை அதிகரியுங்கள். இதனால், அன்று சேர்ந்த அதிகப்படியான கலோரி எரிக்கப்பட்டுவிடும்.

 தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம் போன்றவற்றைப் பயன்படுத்துவது அவர்கள் பிறப்புரிமை அல்ல; நேரம் கிடைக்கும்போது மேற்கொள்ளக்கூடியது என்ற மனநிலையை ஏற்படுத்துங்கள்.
 குழந்தைகளுக்கான தனியறையில் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர்களை வைக்க வேண்டாம்.

 தொலைக்காட்சியைப் பார்த்தபடி சாப்பிட அனுமதிக்காதீர்கள். உடல் பருமனுக்கு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே உணவு உட்கொள்வது மிக முக்கியக் காரணம்.

 ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.
 தொலைக்காட்சியைப் பார்க்கும்போது இடைவேளை நேரத்தில், ''அதை எடுத்து வா, இதை எடுத்து வா'' என்று  குழந்தைகளின் உடல் உழைப்பை ஊக்குவியுங்கள்.

 உடல் உழைப்பு

குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் (6 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள்) தினமும் குறைந்தது 60 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்ற அளவில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு உடற்பயிற்சி செய்வது போதுமானது.

விளையாட்டு மைதானத்தில் நேரம் செலவிட்டாலே போதும், குழந்தைகள் ஆரோக்கியம் காக்கப்படும்.
பள்ளிக்குச் செல்வதற்குத் தயாராகாத குழந்தைகளை நன்கு விளையாட அனுமதியுங்கள். விழுந்துவிடும், அடிபட்டுவிடும் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்காதீர்கள்.
ஓரளவுக்கு வளர்ந்த குழந்தைகளை உடற்பயிற்சி ஆலோசகர் முன்னிலையில்,  கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற குழுவாக விளையாடும் விளையாட்டுக்களிலோ அல்லது ஓட்டம், உயரம் தாண்டுதல் போன்ற தனி நபர் விளையாட்டுக்களிலோ ஈடுபட அனுமதியுங்கள்.
குழந்தைகள் விளையாடுவதற்குப் பள்ளிகள் அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி வகுப்பு கட்டாயம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் உடற்பயிற்சி ஆசிரியர் இருக்க வேண்டும்.

நன்றி விகடன்

Disqus Comments