.

Saturday, December 6, 2014

குளிர்காலத்திற்கு ஏற்ற சில அடிப்படை சரும பராமரிப்பு குறிப்புகள்!!!



அனைவருக்கும் பிடித்த காலம் குளிர்காலமாக இருக்கலாம். ஆனால் இந்த குளிர்காலத்தில் தான் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதில் முதன்மையானது சரும வறட்சி, சரும வெடிப்புகள் போன்றவை. இதனால் குளிர்காலத்தில் சருமத்தின் அழகே சற்று பாழாகக்கூடும். ஆனால் முறையான சரும பராமரிப்பை குளிர்காலத்தில் பின்பற்றி வந்தால், சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.

அதற்காக அழகு நிலையங்களுக்கு எல்லாம் செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்து கொண்டே ஒருசில பழக்கங்களை பின்பற்றி வந்தாலே சருமத்தை பிரச்சனையின்றி அழகாக வைத்துக் கொள்ளலாம். இங்கு குளிர்காலத்திற்கு ஏற்ற சில அடிப்படை சரும பராமரிப்பு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதனை தவறாமல் பின்பற்றி, குளிர்காலத்தில் ஜொலியுங்கள்.

சருமத்தின் அழகைப் பாதுகாக்க வருடம் முழுவதும் செய்ய வேண்டிய ஒரு செயல் தான் கிளின்சிங். ஆனால் இதனை தவறாமல் குளிர்காலங்களில் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நாளைக்கு 2-3 முறை, காட்டனை பாலில் நனைத்து, அதனைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளிவருவதுடன், சருமத்தில் ஈரப்பசையானது தக்க வைக்கப்படும்.

ஸ்கரப்பிங் இதுவும் சருமத்தைப் பராமரிக்க வேண்டிய செயல்களில் மிகவும் முக்கியமானது. அதில வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது மசித்த ஆப்பிள், தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 2 நிமிடம் வட்ட முறையில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

டோனிங் இந்த முறையை குளிர்காலங்களில் அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக சரும சுருக்கம் உள்ளவர்கள் இதனை தவறாமல் செய்ய வேண்டும். அதற்கு ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை அவ்வப்போது துடைத்து எடுக்க வேண்டும்.

மாய்ஸ்சுரைசிங் சருமம் வறட்சியடையாமல் ஆரோக்கியமான வெளிப்பட தவறாமல் மாய்ஸ்சுரைசரைத் தவட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயில் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் ஈரப்பசையானது எப்போதும் இருக்கும்.

குளிர்கால ஃபேஸ் பேக்குகள் ஃபேஸ் பேக்குகளில் எத்தனையோ உள்ளன. ஆனால் அவற்றில் சரும வறட்சியைத் தடுக்கும் ஃபேஸ் பேக்குகளை வாரம் 1-2 முறையாவது போட வேண்டும். இங்கு குளிர்காலத்திற்கு ஏற்ற சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிடித்ததை முயற்சித்துப் பாருங்கள்.

1. அவகேடோ ஃபேஸ் பேக் 
அவகேடோவில் ஈரப்பசையை தக்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனை மசித்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

2. வாழைப்பழ ஃபேஸ் பேக் 
வாழைப்பழத்திலும் சரும வறட்சியைத் தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனைப் பயன்படுத்தியும் ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் தேன் பயன்படுத்தி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

3. மோர் ஃபேஸ் பேக்
மோரில் கொழுப்புக்கள் இருப்பதால், அந்த மோரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

4. கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்
கற்றாழை ஜெல் சரும வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். அதறக் அந்த ஜெல்லை முகத்தில் தடவி உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தண்ணீர் குடிக்கவும்
என்ன செய்தாலும், தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதை மட்டும் மறக்கக் கூடாது. இதனால் உடலில் நீர்ச்சத்தானது அதிகம் இருந்து, சருமமானது வறட்சியடையாமல் இருக்கும்.

சன்ஸ்க்ரீன்
குளிர்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என்று பலர் சன்ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் எவ்வளவு தான் கடுமையாக வெயில் அடிக்காவிட்டாலும், சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை மட்டும் தவிர்க்கக்கூடாது.
Disqus Comments